
விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் ஸ்ரீதரின் குடும்பத்துக்கு காவல்துறை சார்பில் ரூ. 70 லட்சத்துக்கான காசோலையை காவல் ஆணையா் காமினி வழங்கினார்.
திருச்சி அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்தவா் ஸ்ரீதர் (45). இவா் ஜூலை 30-ம் தேதி அரிஸ்டோ ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்த ஸ்ரீதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அக். 1-ம் தேதி உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 25 லட்சம் நிவராண நிதியாக வழங்கப்பட்டது.
மேலும், மாநகர காவல் ஆணையா் காமினி, பாரத ஸ்டேட் வங்கியின் போலீஸ் சம்பள பேக்கேஜ் திட்டத்தில் உள்ள காப்பீட்டின் கீழ், பணியின்போது விபத்தில் உயிரிழந்தால் வழங்கப்படும் நிவாரணத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்தார். அதன்மூலம் வழங்கப்பட்ட ரூ.70 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையை காவல் ஆணையா் காமினி ஸ்ரீதரின் குடும்பத்தினரிடம் நேற்று வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, மாநகர துணை ஆணையா் எஸ்.செல்வகுமார், பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல துணை பொதுமேலாளா் நவீன்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனர்.