
சென்னையில் கடந்த 3 நாட்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக, 6187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 42 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
திருத்தி அமைக்கப்பட்ட மோட்டார் வாகன சட்ட விதிகளின் படி, போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பான புதிய அபராதம் விதிக்கும் முறை, கடந்த 26ம் தேதி முதல் சென்னையில் அமல் படுத்தப்பட்டது. இதில், சென்னையில் கடந்த 3 நாட்களாக 6187 வழக்குகள், போக்குவரத்து போலீஸாரால் பதிவு செய்யப்பட்ட நிலையில், சுமார் 42 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இதில், 2293 பேர்கள் உடனடி அபராத தொகை செலுத்தியதில், 16 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டும், மீதம் 26 லட்சத்தி 74 ஆயிரம் ரூபாய் நிலுவையில் உள்ளதாகவும் சென்னை போக்குவரத்து காவல் துறை தகவல் தெரிவித்து உள்ளது. திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி நான்கில் ஒரு பங்கு தான் அபராதம் விதித்து வருவதாகவும், விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.