30 குறவர் சமூகத்தினர் மீது 549 பொய் வழக்குகள்! : அதிர்ச்சி தகவல்

30 குறவர் சமூகத்தினர் மீது 549 பொய் வழக்குகள்! : அதிர்ச்சி தகவல்

குறவர் சமூகத்தைச் சேர்ந்த 30 பேர் மீது 549 பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதுரையில் நடைபெற்ற நிகழ்வில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த போப் என்ற தன்னார்வ அமைப்பு மனித உரிமை மீறல்கள் குறித்து தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரி பகுதிகளில் கடந்த 2021 நவம்பர் மாதம் ஆய்வை மேற்கொண்டது.

அப்போது குறவர் சமூகத்தைச் சேர்ந்த 30 பேரை தேர்வு செய்து நடத்தப்பட்ட ஆய்வில், அவர்கள் மீது மொத்தம் 549 வழக்குகள் பதியப்பட்டது தெரிய வந்தது. அதில் 262 வழக்குகளில் அவர்கள் விடுதலை பெற்றும், 38 வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளனர். இவர்கள் மீதுள்ள மற்ற வழக்குகள் நீதிமன்ற விசாணையில் இருப்பதும் தெரிய வந்தது.

அந்த ஆய்வு அறிக்கையை மற்றும் ஆவணப்படம் வெளியிடும் நிகழ்ச்சி மதுரையில் இன்று நடைபெற்றது. ஆய்வறிக்கையை இந்திய மாதர் தேசிய சம்மேளன பொதுச்செயலாளர் ஆனி ராஜா வெளியிட்டார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " குறவர் சமூகத்தினர் நெடுங்காலமாக காவல்துறையினரின் கொடுமைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த 2021 நவம்பரில் 30 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அவர்கள் மீது 1994-ம் ஆண்டு முதல் தற்போது வரை 18 வயது முதல் 60 வயது வரை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அந்த 30 பேர்களில் 5 பேர் மீது தான் குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளது" என்று கூறினார்.

மேலும்," குறிப்பாக 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் மீது தான் காவல்துறை அதிகமான பொய் வழக்கு போட்டு சித்ரவதை செய்கிறது. அவர்கள் மீது என்ன வழக்கு பதிகிறார்கள், அவர்களை எங்கு வைத்திருக்கிறார்கள் என்ற தகவல்களைக் கூட அவர்களது குடும்பத்தினருக்கு காவல்துறை தெரிவிப்பதில்லை. ஜனநாயக உரிமைகளை அதிகம் பேசும் தமிழகத்தில் இந்த கொடுமைகள் நடைபெற்று வருவது வேதனை அளிக்கிறது.

பழங்குடி மக்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அவர்களுக்கு முழுமையாக போய் சேர்கின்றனவா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.எனவே, இந்த 30 பேர் மீதும் பதியப்பட்ட வழக்குகள் அனைத்தையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு தனி கவனம் எடுத்து விசாரிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.