ஈரோடு ஸ்தம்பித்தது... ரூ.300 கோடி இழப்பு; 50,000 விசைத்தறிகள் வேலைநிறுத்தம்!

ஈரோட்டில் 50 ஆயிரம் விசைத்தறிகள் வேலை நிறுத்தப் போராட்டம்
ஈரோட்டில் 50 ஆயிரம் விசைத்தறிகள் வேலை நிறுத்தப் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து ஈரோட்டில் ஜவுளி வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து 50,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

மத்திய அரசு வருமான வரி சட்டத்தில் 43 பி (எச்) பிரிவில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. மார்ச் 31ம் தேதி முதல் இந்த புதிய சட்ட திருத்தத்தன் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இருப்புநிலை குறித்து கணக்கில் இருக்கும் வணிக கடன் நிலுவைகள், 45 நாட்களுக்கு மேலே சென்று இருந்தால், அவை வருமானமாக கருதப்பட்டு வருமான வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் ஜவுளிக்கடைகள் அடைப்பு
ஈரோட்டில் ஜவுளிக்கடைகள் அடைப்பு

இந்த சட்ட மாறுதல் சிறு, குறு தொழில்களை மட்டுமின்றி ஜவுளித்துறை சார்ந்த துறைகளை பெரிதும் பாதிக்கும் என்பதால், அந்த துறையினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சட்டத்தை ஓராண்டுக்கு தள்ளி வைக்க வேண்டுமென ஈரோடு கிளாத் மெர்செண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதும், மத்திய அரசிடம் இருந்து உறுதியான பதில் எதுவும் கிடைக்கவில்லை. இதனை கண்டிக்கும் வகையில் ஈரோட்டில் ஜவுளி வணிகர்கள் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோட்டில் ஜவுளிக்கடைகள் அடைப்பு
ஈரோட்டில் ஜவுளிக்கடைகள் அடைப்பு

போராட்டம் காரணமாக ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, ஆர்.கே.வி சாலை, மணிக்கூண்டு, திருவேங்கடம் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதே போல் ஜவுளி வணிக நிறுவனங்கள் உள்ள அமைந்துள்ள திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, பிருந்தா வீதி, கொங்கலம்மன் கோயில் வீதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. வணிகர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 50 ஆயிரம் விசைத்தறி உரிமையாளர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக ஈரோடு, பள்ளிபாளையம், வெண்ணத்தூர், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் சுமார் 50,000 விசைத்தறிகள் இன்று ஒரு நாள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஈரோட்டில் 50 ஆயிரம் விசைத்தறிகள் வேலை நிறுத்தப் போராட்டம்
ஈரோட்டில் 50 ஆயிரம் விசைத்தறிகள் வேலை நிறுத்தப் போராட்டம்

கடை அடைப்பு போராட்டம் காரணமாக 300 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர். சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான துணி உற்பத்தியும் பாதிக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டம் காரணமாக எப்போதும் பரபரப்புடன் காணப்படும் ஈரோடின் முக்கிய நகர வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in