நெல்லை காவல் உதவி ஆய்வாளருக்கு 5 லட்சம் ரூபாய் நிதி: நேரில் வழங்கப்பட்டது

நெல்லை காவல் உதவி ஆய்வாளருக்கு 5 லட்சம் ரூபாய் நிதி: நேரில் வழங்கப்பட்டது
காவல் உதவி ஆய்வாளருக்கு ஆறுதல் கூறும் அமைச்சர் கண்ணப்பன், காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உள்ளிட்டவர்கள்

நெல்லை மாவட்டத்தில் கோயில் விழா பாதுகாப்புப் பணியின்போது கத்திக்குத்து பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவல் உதவி ஆய்வாளருக்கு தமிழக முதலமைச்சர் அறிவித்தபடி 5 லட்சம் ரூபாய் நிதி இன்று அவரிடம் நேரில் வழங்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூரில் அம்மன் கோவில் கொடை விழாவின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் மார்க்கரேட் திரேஷாவை, ஆறுமுகம் என்பவர் கத்தியால் குத்தினார். இதில் காயம் அடைந்த காவல் உதவி ஆய்வாளரை சக காவலர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய ஆறுமுகத்தை பிடித்த போலீஸார் விசாரணை நடத்திய நிலையில், அவர் கழிப்பறையில் வழுக்கி விழுந்து கை எலும்பு முறிந்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காவல் உதவி ஆய்வாளரை, நெல்லை சரக டிஐஜி உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் அலைபேசி வழியாக அவரைத் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார். அத்துடன் அவருக்கு தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 5 லட்ச ரூபாய் நல நிதியாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி திருநெல்வேலி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் திரேஷாவை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அத்துடன் தமிழக முதல்வர் அறிவித்திருந்த 5 லட்சத்திற்கான நிதியையும் அவர்கள் வழங்கினர்.

Related Stories

No stories found.