சோமோட்டோ அனுப்பிய கெட்டுப்போன 3600 கிலோ ஆட்டுக்கறி: ஆன்லைன் ஆர்டரால் பதறிய ஆர்.ஆர். பிரியாணி ஓனர்

சோமோட்டோ அனுப்பிய கெட்டுப்போன 3600 கிலோ ஆட்டுக்கறி: ஆன்லைன் ஆர்டரால் பதறிய ஆர்.ஆர். பிரியாணி ஓனர்

பிரபல தனியார் பிரியாணி நிறுவனம் ஆன்லைனில் வரவழைத்த 3600 கிலோ ஆட்டுக்கறி முழுவதும் கெட்டுப்போனதாக இருந்ததால் அந்நிறுவனம் பெரும் அதிர்ச்சியடைந்து, கெட்டுப்போன இறைச்சியை உணவு பாதுகாப்புத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சேலத்தைச் சேர்ந்த பிரபல பிரியாணி கடையான ஆர்.ஆர்.பிரியாணி நிறுவனத்திற்கு ஏராளமான கிளைகள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் அந்நிறுவனம் திருமணம் போன்ற விருந்துகளுக்கு மொத்தமாக பிரியாணி சமைத்துக் கொடுப்பது வழக்கம். அப்படி தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நேற்று நடைபெற்ற ஒரு திருமணம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் உணவு தயாரிக்கும் பணியை நிறுவனம் மேற்கொண்டது.

இதற்காக சோமோட்டோ நிறுவனம் மூலம் இறைச்சியை அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. சோமோட்டோ நிறுவனம் கர்நாடகாவிலிருந்து ஆடு மற்றும் கோழி இறைச்சிகளை வரவழைத்து ஆர்ஆர் பிரியாணி நிறுவனத்திற்கு சப்ளை செய்திருந்தது.

நேற்று ஒரத்தநாட்டில் நடைபெற்ற திருமணத்திற்காக நிறுவனத்தின் மத்திய சமையலறையில் உணவு சமைக்கும் பணியை அந் நிறுவனம் மேற்கொண்டது. அப்போது இறைச்சியில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசியிருக்கிறது. அதனையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இறைச்சியை சோதனை செய்தனர்.

சோதனையில் அங்கிருந்த 3600 கிலோ இறைச்சியும் கெட்டுப்போய் இருந்தது உறுதியானது. அதனையடுத்து அந்த 3600 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட போது அவை முழுவதுமாக கெட்டுப் போனவை என்பது உறுதியானது.

கெட்டுப்போன இறைச்சியை வழங்கிய சோமோட்டோ நிறுவனம் இதுகுறித்து உரிய பதிலளிக்க வேண்டும் என்று ஆர்ஆர் பிரியாணி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in