செஷல்ஸ் நாட்டில் மேலும் 26 இந்திய மீனவர்கள் கைது

செஷல்ஸ் நாட்டில் மேலும் 26 இந்திய மீனவர்கள் கைது
கைது செய்யப்பட்டவர்களில் சிலர்

கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் மண்டலத்தை சார்ந்தவர்கள் உட்பட மேலும் 26 மீனவர்களை செஷல்ஸ் நாட்டு கடற்படைகள் சிறைபிடித்துள்ளனர். இவர்களது 2 விசைப்படகுகளும் செஷல்ஸ் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. பல லட்சம் மதிப்பிலான இவர்கள் பிடித்துவைத்திருந்த மீன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் துறைமுகப்பகுதியிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் 22-ம்தேதி தூத்தூரை சார்ந்த பொனிப்பஸ் மகன் சூசைநாயகம் என்பவருக்கு சொந்தமான வாடிமாதா என்ற விசைப்படகில் தூத்தூர், பூத்துறை, வள்ளவிளை, கருங்கல் பகுதிகளை சார்ந்த மரிய சேகர், லிஸ்டன், கெப்ரின், ஸ்டைப் டொனோ, சைமன், அருளப்பன், மரியதாசன், ஜாண்கிளாடின், ஜினோஷ், ஜோனாஸ், ரகு மைக்கேலடிமை ஆகியோர் மீன் பிடிக்கச் சென்றனர். இதேபோல் பிப்ரவரி மாதம் 26-ம் தேதி பூத்துறையை சார்ந்த அந்தோனி என்பவருக்கு சொந்தமான வித்யா என்ற விசைப்படகில் பூத்துறையை சார்ந்த ஆன்றனி, ஜாண்குமார், ஜோசப் குமார், மரிய அருண், கிளார்பெர்ட், கிளாரன்ஸ், மனு, ததேயூஸ், ஜாண்போஸ்கோ, லாம்பர்ட், சேவியர், முகமது இஸ்மாயில், கடலூர் மாவட்டத்தை சார்ந்த யுவராஜா மற்றும் திருவனந்தபுரம் மாவட்டத்தை சார்ந்த ரொனால்ட் ஆகியோர் மீன்பிடிக்க சென்றனர்.

இந்த 26 மீனவர்களும் மார்ச் மாதம் 9-ம் தேதி செஷல்ஸ் நாட்டு கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இந்த 2 விசைப்படகிலுள்ள கேப்டன்கள் காவல்நிலைய கட்டுப்பாட்டிலும், 24 மீனவர்களும் தங்களது விசைப்படகிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை உடனடியாக மீட்டு தாய்நாடு கொண்டுவர மத்திய, மாநில அரசுகளுக்கு சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணி கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

ஏற்கெனவே மார்ச் மாதம் 7-ம் தேதி குமரியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற, 3 விசைப்படகுகளையும் 33 மீனவர்களையும் செஷல்ஸ் கடற்படையினர் கைது செய்து இருந்தனர். இவர்களை விரைந்து மீட்கக்கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும் கடிதம் அனுப்பினார். இந்நிலையில், மேலும் 26 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் இவர்களது உறவினர்கள் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.