`ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் தொகுதிகளிலும் திட்டத்தைச் செயல்படுத்துவோம்'- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

`ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் தொகுதிகளிலும் திட்டத்தைச் செயல்படுத்துவோம்'- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

திமுக ஆட்சி பொறுப்பேற்று முதலாம் ஆண்டு நிறைவடைவதையொட்டி சட்டப் பேரவையில் உரையாற்றிய முதல்வர், ஐந்தாம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டி, மருத்துவ உதவி, நகராட்சிகளில் தகைசால் பள்ளி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக நகர்ப்புற பகுதிகளில் மருத்துவ நிலையங்கள், உங்கள் தொகுதியில் முதல்வர் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

இது குறித்து சட்ட பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “கிராமங்களில் ஆரம்பச் சுகாதார நிலையம் துணை சுகாதார நிலையம் இருப்பதைப் போல நகர்ப்புறங்களில் மருத்துவ நிலையங்கள் அமைய இருக்கின்றன. நகர்ப்புற மக்கள் அரசு பொது மருத்துவமனையை நோக்கி வரும்போது, மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாகி வருகிறது. இந்த நிலையை மாற்றி ஒருங்கிணைந்த தரமான மருத்துவ சேவைகளை மக்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே இத்திட்டம் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை பெருநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நகராட்சி பகுதிகளில் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் புதிதாகத் தொடங்கப்படும்.

இந்த மருத்துவ நிலையங்களுக்கு 180 கோடியே 45 லட்ச ரூபாயில் சொந்த கட்டடம் கட்டப்படும். 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்களிலும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் எட்டு மணி வரையிலும் இரு வேளைகளிலும் புறநோயாளிகள் சேவை செயல்படுத்தப்படும். இந்த நிலையங்களில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் ஆகிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த திட்டத்தின் மூலமாகத் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகர்ப்புற மருத்துவ நிலையங்களிலும் காலையும் மாலையும் ஏழை எளியோர்க்கு இலவச மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்து 2030-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் நல்வாழ்வு என்ற நிலையைத் தமிழ்நாடு எட்டும்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக நான் பல்வேறு ஊர்களுக்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்து அவர்களிடம் கோரிக்கைகளைப் பெற்றேன். இந்த மனுக்களைப் பரிசீலனை செய்வதற்காகவே உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற தனித்துறை உருவாக்குவோம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுத் தீர்வு காணப்பட்டது. மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதால் இதே திட்டத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதன் அடிப்படையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டமானது தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளும் நடைமுறைக்கு வரப்போகிறது. 234 தொகுதிகளிலும் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத அவசியத் தேவைகள் குறித்து அந்தந்த சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரையின் அடிப்படையில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளோடு இணைந்து பரிசீலனை செய்வார்கள். அடுத்து வரும் சில நிதி ஆண்டுகளில் அவற்றை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கப்படும்.

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் தொகுதி மக்களின் தேவை அறிந்து மாவட்ட ஆட்சியரிடம் பத்து முக்கிய திட்டங்கள் குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க வேண்டும். அந்த பட்டியலில் உள்ள முக்கிய திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களின் கீழ் செயல்படுத்த இயலாத திட்டத்தை முன்னுரிமை அளித்துச் செயல்படுத்துவோம். இந்த பணிகளுக்கு 1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் நேரடியாக என்னுடைய கண்காணிப்பில் நடைபெறப் போகிறது. எனது கொளத்தூர் தொகுதியாக இருந்தாலும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி தொகுதியாக இருந்தாலும், எதிர்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ்ஸின் போடி தொகுதியாக இருந்தாலும் அனைத்து தொகுதிகளும் சமமாகத் திட்டங்கள் தீட்டப்படும் என்பதை உறுதியளிக்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.