
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
தஞ்சாவூர் அருகே பூதலூர் சாலையில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் களிமேடு கிராமம் உள்ளது. இங்கு சைவ சமய நால்வர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் சுவாமிகளுக்கு கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருநாவுக்கரசர் சித்திரை சதய விழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். அதன்படி தற்போது 94-வது சதய விழா நேற்று தொடங்கி நடந்து வருகிறது. நேற்று இரவு சப்பரம் நிகழ்வு நடைபெற்றது.
அதையொட்டி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தை ஊர்மக்கள் ஒன்றுகூடி இழுத்துச் சென்று கொண்டிருந்தனர். ஊரின் மையப்பகுதியில் வரும்போது சப்பரம் சாலை ஓரமாக சிறிது இறங்கியிருக்கிறது. அப்போது மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்சார வயர்களில் சப்பரத்தில் மேல் முனை பட்டுவிட்டது. அதனால் சப்பரம் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. அதனால் சப்பரத்தை பிடித்திருந்தவர்கள் அனைவரின் மீதும் மின்சாரம் பாய்ந்தது. சிறுவர்கள் உட்பட பலரும் தூக்கி வீசப்பட்டனர். சப்பரத்தின் அடிப்பகுதியில் பிடித்த தீயால் சப்பரம் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது.
சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் சந்தோஷ், ராஜ்குமார் என்ற இரண்டு சிறுவர்கள் உட்பட 10 பேர் துடிதுடித்து உயிர் இழந்தார்கள். மின்சாரம் பாய்ந்து உயிருக்கு தவித்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிகிச்சை பலனின்றி ஒரு சிறுவன் உயிரிழந்தான். அதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்திருக்கிறது.
மேலும் பலரும் கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இறந்தவர்கள் அனைவரது உடல்களும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களில் தந்தை - மகன், முன்னாள் ராணுவ வீரர், கோயில் பூசாரி உள்ளிட்டவர்களும் அடக்கம். கோவில் விழாவில் இப்படி மின்சாரம் பாய்ந்து குலைநடுங்க வைக்கும் வகையில் 11 பேர் உயிரிழந்திருப்பது தஞ்சை பகுதியையே பெருத்த சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
படங்கள் ஆர்.வெங்கடேஷ்