10,11,12-ம் வகுப்பு பொதுத் தேர்வு: அரசுக்கு ஆசிரியர் நல கூட்டமைப்பு முக்கிய கோரிக்கை

10,11,12-ம் வகுப்பு பொதுத் தேர்வு: அரசுக்கு ஆசிரியர் நல கூட்டமைப்பு முக்கிய கோரிக்கை

தமிழகத்தில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை அனைத்து பள்ளிகளிலும் நடத்துவதற்கு தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர் நல கூட்டமைப்பு தலைவர் அருணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மே முதல் வாரத்தில் இருந்து 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. இந்த சூழலில் தமிழகத்தில் பல இடங்களில் கரோனா தொற்று எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது. ஐஐடி வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மீண்டும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அருணன்
அருணன்

இப்படிப்பட்ட சூழலில் மே மாதம் முழுவதும் பொதுத்தேர்வுகள் நடைபெற இருப்பது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 10 ,11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சராசரியாக 3,500 மையங்களில் நடைபெற உள்ளது.

இப்படி குறிப்பிட்ட மையங்களில் மட்டும் தேர்வுகள் நடைபெறுவற்கு பதிலாக, அனைத்து பள்ளிகளையும் தேர்வு மையங்களாக மாற்றி அறிவித்தால், மாணவர்கள் போதிய சமூக இடைவெளியை பின்பற்றி தேர்வு எழுதுவதுடன், குறிப்பிட்ட மையங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க இயலும் என தேர்வுத்துறைக்கு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகளையும் தேர்வு மையங்களாக மாற்றுவதற்கு தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.