10.5% உள் இடஒதுக்கீடு ரத்து: தமிழக அரசு அடுத்தகட்ட முயற்சி

அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
10.5% உள் இடஒதுக்கீடு ரத்து: தமிழக அரசு அடுத்தகட்ட முயற்சி

"வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு ரத்து விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அரசு நடவடிக்கை எடுக்கும்" என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் வெளியான இந்த அறிவிப்பு பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக, இது தொடர்பான அரசாணையை திமுக தலைமையிலான தமிழக அரசு வெளியிட்டது. இதையடுத்து வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட உள் இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சாதி வாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே உள் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்‌ எனக் கூறி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்‌ இஒதுக்கீட்டிற்கான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் பாமக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், "உள் இடஒதுக்கீடு வழங்கும்போது அதற்கான சரியான, நியாயமான காரணங்களை அரசு தரவேண்டும். உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும் சரியான காரணங்களை கூறவேண்டும். சாதி அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீட்டை முடிவு செய்ய முடியாது. வன்னியர்களை மட்டும் தனி பிரிவாக கருதுவதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை. வன்னியர் உள் இடஒதுக்கீடு சட்டம் அரசியல் சட்டத்தின் 14, 16வது பிரிவுகளுக்கு விரோதமானது. வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு செல்லும்" என்று கூறியது.

இந்நிலையில், வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு ரத்து விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அரசு நடவடிக்கை எடுக்கும்" என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "முதல்வர் அறிவுறுத்தியபடி மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வழக்கில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டும் இத்தகையை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சரியான அடிப்படை தரவுகள் இன்றி சட்டத்தை கொண்டு வந்ததால்தான் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அதிமுக ஆட்சியில் சரியான தரவுகள் இன்றி வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக அவசர கோலத்தில் அதிமுக ஆட்சியில் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதே ரத்துக்கு காரணம். எந்த ஒரு பிரிவினருக்கும் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு உரிமையுண்டு என்பதை நீதிமன்றம் ஏற்றுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் தீவிரமாக கலந்து ஆலோசித்து தமிழக அரசு முடிவு எடுக்கும்" என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in