`ஆகஸ்ட் மாதத்துக்குள் 1 லட்சம் பேருக்கு வேலை'- உறுதியளித்த அமைச்சர் கணேசன்

`ஆகஸ்ட் மாதத்துக்குள் 1 லட்சம் பேருக்கு வேலை'- உறுதியளித்த அமைச்சர் கணேசன்

தமிழக அரசு வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர திட்டமிட்டுள்ளதாக தமிழக தொழிளாலர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம், உதகையில் தனித்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 12-ம் தேதி நடக்கிறது. இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் இன்று உதகை வந்திருந்தார். உதகை தமிழகம் விருந்தினர் மாளிகையில் நடந்த ஆய்வு கூட்டத்தில், அனைத்துத் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார். கூட்டத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இயக்குநர் வீரராகவ ராவ், மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் ஆகியோர் பங்கேற்றனர்.

அமைச்சர் சி.வி.கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் இதுவரை 56 இடங்களில் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி 72 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரபட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் 12-ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. தமிழக அரசு வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் 37 லட்சத்து 50 ஆயிரம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் அதிமுக ஆட்சி காலத்தில் 75 ஆயிரம் பேருக்கு நல திட்டம் உதவிகள் வழங்கபடாமல் இருந்தது. அவர்களையும் சேர்த்து இதுவரை 1 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு நல திட்டம் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது.

அரசு பொறுப்பேற்று ஒரே ஆண்டில் 4 லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு ரூ.299 கோடிக்கு நல திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆட்டோ ஓட்டும் 500 பெண்களுக்கு ரூ.1 லட்சம் மானியத்தில் ஆட்டோ வழங்கும் திட்டம், தொழிலாளி இறந்தால் வழங்கப்பட்டு வந்த ஒரு லட்சம் நிதி ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அவர்களின் மகனோ அல்லது மகளோ திருமணம் செய்ய ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 91 தொழிற்பயிற்சி நிலையங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்ட நிலையில், அவற்றில் உள்ள உபகரணங்கள், இயந்திரங்களை மேம்படுத்தி நவீனமயமாக்க ரூ.2877 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 71 தொழிற் பயிற்சி நிலையங்கள் புனரமைக்கபட்டுள்ளதாகவும் புதிதாக 11 தொழிற் பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்படும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in