`நல்லது செய்வதற்கே நேரம் போதவில்லை; கெட்டதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை'- முதல்வர் ஸ்டாலின்

`நல்லது செய்வதற்கே நேரம் போதவில்லை; கெட்டதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை'- முதல்வர் ஸ்டாலின்

"உள்நோக்கத்தோடு அவதூறு செய்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நல்லது செய்வதற்கே எனக்கு நேரம் போதவில்லை. கெட்டதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை" என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தேனி மாவட்டத்தில் ரூ.114 கோடி மதிப்பில் முடிவுற்ற 40 திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் ரூ.74.21 கோடி மதிப்பிலான 102 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பேசிய முதல்வர், "தேனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை கலைஞர் கருணாநிதி உருவாக்கினார். திமுக ஆட்சியில் தேனி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை கலைஞர் ஆட்சியில் ரூ.32 கோடியில் கட்டப்பட்டது. சோத்துப்பாறை அணையால் 32 கிராமங்கள் பயன்பெறுகின்றனர். தேனி மாவட்ட மக்களின் கனவு திட்டமான 18-ம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றியது திமுக அரசுதான். தமிழ்நாடு முதல்வராக நான் பொறுப்பேற்று வரும் 7-ம் தேதி ஓராண்டு நிறைவு பெறுகிறது.

அரசின் அனைத்து திட்டங்களும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்துவதை மக்கள் இயக்கமாக மாற்றினோம். 91 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் இலங்கை தமிழர்களுக்காக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல் ஆட்சி.

ஒன்றிய அரசு, மற்ற மாநிலங்கள் குறைக்கும் முன்பே தமிழ்நாடு அரசு பெட்ரோல் விலையை குறைத்தது. 5 ஆண்டுகளில் செய்யவேண்டியதை ஓராண்டில் செய்து முடித்திருக்கிறது திமுக அரசு. குறுவை சாகுபடியில் திமுக அரசு வரலாற்று சாதனை படைத்துள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் 133 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

எஞ்சிய வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும். வீரநாயக்கன்பட்டியில் நரிக்குறவர் மற்றும் குறவர் இன மக்களுக்காக குடியிருப்புகள் கட்டி தரப்படும். கடிகாரம் ஓடும் முன் ஓடு என்ற பாரதிதாசனின் வரிகளுக்கேற்ப உழைத்து கொண்டிருக்கிறேன். உள்நோக்கத்தோடு அவதூறு செய்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நல்லது செய்வதற்கே எனக்கு நேரம் போதவில்லை. கெட்டதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை" என்று கூறினார்.

Related Stories

No stories found.