`என்னை புகழாதீங்க, நேரத்தை வீணடிக்காதீங்க'- திமுக எம்எல்ஏவுக்கு முதல்வர் `குட்டு'

`என்னை புகழாதீங்க, நேரத்தை வீணடிக்காதீங்க'- திமுக எம்எல்ஏவுக்கு முதல்வர் `குட்டு'

தமிழக சட்டப்பேரவையில் புகழ்ந்து பேசிய திமுக உறுப்பினருக்கு முதல்வர் ஸ்டாலின் குட்டு வைத்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2022-23-ம் ஆண்டிற்கான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, திமுக உறுப்பினர் சண்முகையா பேசுகையில், மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே, வரலாறு போற்றும் பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அவர்களின் வழியில் தோன்றிய, கோடிக்கணக்கான உடன்பிறப்புகளில் குடியிருக்கும் உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் இருக்கும் திசைநோக்கி வணங்கி, இந்தியாவிலேயே சிறந்த முதல்வரும், தமிழக மக்களின் பாதுகாவலரும், தமிழ்மொழியின் பாதுகாவலரும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால், உழைப்பு உழைப்பு என்று பாராட்டை பெற்றவரும் சட்டத்தின் போராளியும், கழகத் தலைவரும், தமிழகத்திற்கு விடிவெள்ளி தந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு என்று பேசிக் கொண்டிருந்தபோதே, சபாநாயகர் குறுக்கிட்டு, மாண்புமிகு முதலமைச்சர் பேசுவார் என்றார்.

இதையடுத்து, பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரவைத் தலைவர் அவர்களே, நான் ஏற்கெனவே பலமுறை எதிர்கட்சிகளின் வரிசையில் இருந்தபோதும், ஆளும் கட்சி வரிசையில் இருந்தபோதும், நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருப்பது, கேள்வி நேரத்தை அதற்காக மட்டும் பயன்படுத்துங்கள். புகழ்வதற்கோ அல்லது பெருமைப்படுத்தி பேசுவதற்கோ பயன்படுத்தி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மீண்டும், குறிப்பாக ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களுக்கு வலியுறுத்தி, வற்புறுத்தி கேட்டுக் கொள்ள விரும்புகிறேன. கேள்வி நேரத்தில் வேறு எதையும் பற்றி பேசாமல், புகழ்ந்து கொண்டிருக்காமல் கேள்வியை மட்டும் கேளுங்கள் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என்று குட்டு வைத்தார். இதையடுத்து, திமுக உறுப்பினர் சண்முகையா தனது தொகுதியை பற்றி பேசினார்.

Related Stories

No stories found.