‘ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள்’ - மகனுடன் அமர்ந்து மீண்டும் கொண்டாடிய யுவராஜ் சிங்!

‘ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள்’ - மகனுடன் அமர்ந்து மீண்டும் கொண்டாடிய யுவராஜ் சிங்!

இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ் சிங், தனது மகன் ஓரியனை மடியில் அமரவைத்துக்கொண்டு, 2007 டி20 உலகக்கோப்பை போட்டியில் தான் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த மேட்சை பார்த்துக் கொண்டாடியபடி இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

2019 ம் ஆண்டில் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் ஓய்வு பெற்றார். இந்திய அணி இதுவரை கண்டிராத மிகவும் சக்திவாய்ந்த பேட்டர்களில் ஒருவர் யுவராஜ் சிங். பஞ்சாப்பில் பிறந்த இவர், பல கடினமான போட்டிகளில் இந்தியாவை வெற்றிபெற வைத்தவர். இவர் 2007 ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது ஸ்டூவர்ட் பிராட்டின் பந்துவீச்சில் தொடர்ந்து ஆறு பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்து உலக சாதனைப் படைத்தார். அந்தப் போட்டியில் யுவராஜ் சிங் 16 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற உதவினார். அந்த உலகக் கோப்பை தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடிய யுவராஜ் சிங், இந்திய அணி அப்போது கோப்பையை வெல்ல பெரும் பங்காற்றினார்.

இங்கிலாந்துக்கு எதிரான தனது 15 ஆண்டு கால சாதனையைக் கொண்டாடும் வகையில், யுவராஜ் சிங் இன்று அந்த நாளை மீண்டும் மிகவும் சிறப்பான முறையில், அவரது 9 மாத மகன் ஓரியன் கீச் சிங்குடன் கொண்டாடினார். இது தொடர்பாக யுவராஜ் சிங் தனது ட்விட்டரில் பதிவிட்ட வீடியோவில், மகன் ஓரியன் யுவராஜ் சிங்கின் மடியில் அமர்ந்து 2007 போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அங்கு ஸ்டூவர்ட் பிராட்டின் பந்துவீச்சில் யுவராஜ் சிக்ஸர்களாக தெறிக்கவிட்டுக் கொண்டிருந்தார். அதில் "15 ஆண்டுகளுக்குப் பிறகு இதை ஒன்றாகப் பார்க்க இதைவிட ஒரு சிறந்த துணையைக் கண்டுபிடித்திருக்க முடியாது" என்று யுவராஜ் ட்வீட் செய்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in