ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டியில் பெண் நடுவர்கள்: விளையாட்டு வரலாற்றில் முக்கியத் தருணம்

ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டியில் பெண் நடுவர்கள்: விளையாட்டு வரலாற்றில் முக்கியத் தருணம்

இந்த ஆண்டு இறுதியில் கத்தாரில் நடக்கவிருக்கும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதன்முறையாக பெண் நடுவர்கள் பங்கேற்கவிருக்கின்றனர். மத்தியக் கிழக்கு நாடு ஒன்றில் நடக்கவிருக்கும் போட்டியில் பெண்களுக்கு அளிக்கப்படும் இந்த அங்கீகாரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஆண்கள் கால்பந்து போட்டிகளில் பெண் நடுவர்கள் பங்கேற்பது உண்டு என்றாலும், ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டிகளில் இத்தனைப் பெண்கள் நடுவர்களாகப் பணியாற்றவிருப்பது இதுவே முதல் முறை.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை கத்தார் நாட்டில் நடைபெறவிருக்கிறது. கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனெல் மெஸ்ஸி ஆகிய இரண்டு கால்பந்து ஜாம்பவான்கள் பங்கேற்கவிருக்கும் கடைசி உலகக்கோப்பைப் போட்டி இது. இதில் மூன்று பெண் நடுவர்கள் மற்றும் மூன்று உதவி பெண் நடுவர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்கவிருக்கின்றனர்.

இந்தப் போட்டியில் மொத்தம் 36 நடுவர்கள், 69 உதவி நடுவர்கள் மற்றும் 24 வீடியோ மேட்ச் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். இதில் பிரான்ஸைச் சேர்ந்த ஸ்டெஃபானி ஃப்ரப்பார்ட், ருவாண்டாவைச் சேர்ந்த சலீமா முகான்ஸங்கா, ஜப்பானைச் சேர்ந்த யோஷிமி யமாஷிடா ஆகிய மூவரும் இந்தப் போட்டிகளில் நடுவர்களாகப் பணியாற்றவிருக்கிறார்கள். பிரேசிலைச் சேர்ந்த நியூஸ பாக், மெக்ஸிகோவைச் சேர்ந்த டியாஸ் மெடினா, அமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரீன் நெஸ்பிட் ஆகிய மூவரும் உதவி நடுவர்களாகக் களமிறங்குகிறார்கள்.

தரத்துக்கே முதலிடம் எனும் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச் சிறந்த நடுவர்கள் இப்போட்டியில் பங்கேற்பதாக ஃபிஃபா நடுவர்கள் கமிட்டியின் தலைவர் பியர்லூகி கோலினா கூறியிருக்கிறார். பெண் நடுவர்கள் தொடர்ந்து மிகச் சிறப்பாகப் பணியாற்றிவருபவர்கள் என்பதால், ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதற்கு முழுத் தகுதி கொண்டவர்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in