குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடக்கவிழா: பங்கேற்பது யார், புறக்கணிப்பது யார்?

குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடக்கவிழா: பங்கேற்பது யார், புறக்கணிப்பது யார்?

சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், தலைநகர் பெய்ஜிங் அருகில் உள்ள யாங்கிங் நகரில் இன்று (பிப்.4) தொடங்குகின்றன. 90 நாடுகளைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இப்போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்துவரும் இனப்படுகொலை - மனித உரிமை மீறல்கள், கரோனா அச்சுறுத்தல், கரோனா கட்டுப்பாடுகள் ஆகிய காரணங்களை முன்வைத்துப் பல்வேறு நாடுகள் இந்தப் போட்டியைப் புறக்கணித்திருக்கின்றன.

அதேசமயம், இன்னும் பல நாடுகளின் தலைவர்களைத் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்திருக்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங். அவரது அழைப்பை ஏற்று பல்வேறு தலைவர்கள் சீனாவுக்குச் சென்றிருக்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

ரஷ்யா: ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவுக்கு முன்னதாக ஜி ஜின்பிங்கை, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சந்திக்கிறார். இதன் மூலம், இந்தப் போட்டியை ஒட்டி, அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் சீனா, ரஷ்யா ஆகிய இரு முக்கிய நாடுகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசவிருக்கிறார்கள்.

எகிப்து மற்றும் செர்பியா: மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான கசப்புணர்வில் இருக்கும் எகிப்து நாட்டின் அதிபர் அப்துல் ஃபட்டா எல் சிசி மற்றும் செர்பியா நாட்டின் அதிபர் அலெக்ஸாண்டர் வூசிச் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொள்கின்றனர்.

சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம்: சவுதி அரேபியாவிடமிருந்து அதிக அளவில் பெட்ரோல் இறக்குமதி செய்யும் நாடு சீனா. அதேபோல், கத்தாரிலிருந்து இயற்கை வாயுவையும் அதிக அளவில் சீனா இறக்குமதி செய்கிறது.

சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், இந்நிகழ்வில் பங்கேற்கிறார். சல்மான் குறித்து தொடர்ந்து விமர்சித்து ‘வாஷிங்டன் போஸ்ட்’ போன்ற பத்திரிகைகளில் எழுதிவந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, துருக்கியைச் சேர்ந்த ஹாட்டிஸ் செங்கிஸ் எனும் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். முதல் மனைவியை விவாகரத்து செய்வது தொடர்பான ஆவணங்களைப் பெற, 2018-ல், துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றபோது அவர் காணாமல் போனார். அவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட செய்தி பின்னர் வெளியானது. இதில், இளவரசர் சல்மானின் பெயர் அடிபட்டது. இதுதொடர்பான வழக்கில், இளவரசர் சல்மானின் ஆட்கள் விடுவிக்கப்பட்டனர். இவ்விவகாரத்தில் சீனா எந்தக் கருத்தும் சொல்லாமல் அமைதி காத்தது.

அதேபோல், உய்குர் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து சீனாவுக்கு எதிராகக் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகளை ஆதரிப்பதாக சல்மான் கூறியிருந்தார்.

கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான்: சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தனி நாடுகளான இந்த ஐந்து நாடுகளின் தலைவர்கள் ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். சீனாவுடன் இந்நாடுகள் நெருக்கமான உறவைப் பேணுகின்றன.

கிர்கிஸ்தான் - உஸ்பெகிஸ்தான் இடையில் ரயில்வே பாதை அமைக்கும் திட்டத்தில் சீனா ஈடுபட்டிருந்தது. அந்தத் திட்டப் பணிகள் தாமதமாகிவந்த நிலையில், அவற்றை விரைவுபடுத்தக் கோரி கிர்கிஸ்தான் அதிபர் சதைர் ஜாபரோவ், சீனாவிடம் சமீபத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். துர்க்மேனிஸ்தானிடமிருந்து இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யும் ஒரே நம்பகமான நாடு சீனாதான்.

அர்ஜென்டினா மற்றும் ஈகுவெடார்:

சீனாவின் ‘ஒரே பிரதேசம் – ஒரே பாதை’ திட்டத்தில் இணையவிருக்கும் ஒரே லத்தீன் அமெரிக்க நாடு அர்ஜென்டினா தான்.

அர்ஜென்டினாவில், 1981-க்குப் பிறகு அமைக்கத் திட்டமிடப்படும் முதல் அணு மின்சக்தித் திட்டத்தில் சீனாவின் உதவி கோரி அந்நாட்டின் அதிபர் ஆல்பெர்ட்டோ ஃபெர்னாண்டஸ், அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவிடமிருந்து 4.6 பில்லியன் டாலர் கடன் உதவி வாங்குவது குறித்து, ஜி ஜின்பிங்கிடம் ஈகுவெடார் நாட்டின் அதிபர் கியல்லர்மோ லாஸ்ஸோ பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.

ஐநா மற்று உலக சுகாதார நிறுவனம்: குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில், ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ், உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் டெட்ராஸ் அதானம் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஐநாவுடன் நெருங்கிய உறவு கொண்டது எனக் குறிப்பிட்டிருக்கும் குத்தேரஸ், ஒலிம்பிக் போட்டிகள் ஒற்றுமை மற்றும் அமைதி எனும் செய்தியுடன் மக்களை ஒருங்கிணைக்கின்றன என்றும் கூறியிருக்கிறார்.

புறக்கணிக்கும் நாடுகள்

அமெரிக்காவிலிருந்து தடகள விளையாட்டு வீரர்கள், இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றனர். ஆனால், உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டியிருக்கும் அமெரிக்கா, தொடக்க விழாவில் பங்கேற்க தனது சார்பில் யாரையும் அனுப்பவில்லை.

அதேபோல, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளின் தலைவர்களும் ஒலிம்பிக் போட்டி தொடக்க / நிறைவு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.

கொஸோவா, லித்துவேனியா: தைவானுடன் இந்த இரு நாடுகளும் கொண்டிருக்கும் உறவால் அதிருப்தியடைந்த சீனா, இரு நாடுகளுடனான உறவைத் துண்டித்துக்கொண்டது.

இந்தியா: ஒலிம்பிக் ஜோதியை ஏந்தும் நிகழ்ச்சியில், கல்வான் சம்பவத்தில் காயமடைந்த சீன ராணுவ வீரர் குய் ஃபபாவோ பங்கேற்றதால் அதிருப்தியடைந்த இந்தியா தொடக்க விழாவையும் நிறைவு விழாவையும் புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறது. இந்தியாவின் இந்த முடிவை அமெரிக்கா பாராட்டியிருக்கிறது.

வேறு காரணங்களுக்காகப் பங்கேற்காத நாடுகள்

நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளின் அரச குடும்பத்தினர் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தவறாமல் பங்கேற்பார்கள். அவர்கள், இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை.

அதேபோல், குளிர்கால விளையாட்டுகளுக்குப் பெயர்போன ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இதற்குக் கரோனா பரவல் அச்சுறுத்தலே பிரதானக் காரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்நிகழ்வில் பங்கேற்காத டென்மார்க், நெதர்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகள், சீனாவில் கடைப்பிடிக்கப்படும் கரோனா கட்டுப்பாடுகளை அதற்குக் காரணமாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றன. சீனாவில் நடந்துவரும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் இந்நாடுகள் கவலை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.