
காயம் காரணமாக மருத்துவ சிகிச்சையில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இங்கிலாந்துடனான போட்டியில் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான உலகக் கோப்பை லீக் போட்டி வரும் ஞாயிறு அன்று லக்னோவில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி தயாராகி வருகிறது. இந்நிலையில், வங்கதேசத்துடன் நடைபெற்ற போட்டியின் போது காயமடைந்த ஹர்திக் பாண்டியா, ஆட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார். தற்போது அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். இதன் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நியூசிலாந்துடனான போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.
பாண்டியா இங்கிலாந்துடனான போட்டியில் கலந்துகொள்வார் என பிசிசிஐ அறிவித்திருந்த நிலையில், அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். அதன் காரணமாக அவர் 29ம் தேதி நடைபெறும் போட்டியில் கலந்துகொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேநேரம் அவருக்கு ஓய்வு அளித்து, அரையிறுதி போட்டிகளில் களமிறக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இவை குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.