பாகிஸ்தான் விளையாடாவிட்டால் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பையை யார் பார்ப்பார்கள்? - ரமிஸ் ராஜா

பாகிஸ்தான் விளையாடாவிட்டால் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பையை யார் பார்ப்பார்கள்? - ரமிஸ் ராஜா

பாகிஸ்தான் விளையாடாவிட்டால் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பையை யார் பார்ப்பார்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் ரமிஸ் ராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கடந்த மாதம் ஊடகங்களுக்கு 2023- ம் ஆண்டு ஆசிய கோப்பைக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், மாறாக அந்த இடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்படும் என்றும் கூறியிருந்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரமிஸ் ராஜா, “எங்களிடம் தெளிவான நிலைப்பாடு உள்ளது. இந்திய அணி ஆசியக் கோப்பைக்காக இங்கு வந்தால் உலகக் கோப்பைக்கு நாங்கள் இந்தியாவுக்குச் செல்வோம். அவர்கள் வரவில்லை என்றால் நாங்கள் இல்லாமல் உலகக் கோப்பையை விளையாடலாம். அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்கவில்லை என்றால், அதை யார் பார்ப்பார்கள்” என கேள்வி எழுப்பினார்

மேலும், “எங்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன், அது நாம் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே நடக்கும். 2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தினோம். டி20 ஆசிய கோப்பையிலும் இந்தியாவை வீழ்த்தினோம். ஒரு வருடத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு பில்லியன் டாலர் பொருளாதார அணியை இரண்டு முறை தோற்கடித்தது ”என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in