பாகிஸ்தானை வென்றது ஆப்கானிஸ்தான்... தலிபான்கள் கூறிய வாழ்த்து செய்தி என்ன?

பாகிஸ்தானை வென்றது ஆப்கானிஸ்தான்... தலிபான்கள் கூறிய வாழ்த்து செய்தி என்ன?

பாகிஸ்தான் அணியை வென்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு தலிபான்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் திங்கள் கிழமை சென்னையில் உள்ள எம்ஏசிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை முதல் முறையாக தோற்கடித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவுகள் பதற்றத்துடன் இருந்து வருகின்றன. திங்கள் கிழமை பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வென்ற ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் ஜத்ரான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஸத்ரான் 87 ரன்கள் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆட்ட நாயகன் விருதை வாங்க வந்த ஜத்ரானிடம் அவர் இதை யாருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறார் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இந்தப் போட்டியில் நான் நன்றாக ஆடியதற்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நேர்மறையான அணுகுமுறையுடன் விளையாட விரும்பினேன். பலமுறை குர்பாஸும் நானும் சிறந்த பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தியுள்ளோம். நாங்கள் இணைந்து நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளோம். 16 வயதுக்குக் குறைவானோருக்கான போட்டிகளில் ஆடிய நாட்களில் இருந்து நாங்கள் இருவரும் நண்பர்கள். இந்த ஆட்ட நாயகன் விருதை பாகிஸ்தானில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு அர்ப்பணிக்கிறேன்” என்றார்.

பாகிஸ்தான் அரசு சுமார் 17 லட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் நவம்பர் 1-ஆம் தேதிக்குள் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானின் இந்த முடிவை விமர்சித்துள்ளதுடன், ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறியுள்ளது.

இந்த சூழலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றி குறித்து காபூல் காவல்துறையின் செய்தித் தொடர்பாளரும், தலிபானின் கூட்டாளியுமான காலித் சத்ரான் ட்விட்டரில், "எங்கள் தேசிய கிரிக்கெட் அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. பலர் சாத்தியமற்றது என்று கூறிய வெற்றியை நாங்கள் அடைந்துள்ளோம். இந்த வெற்றி சிலருக்கு ஒரு சிறப்பு செய்தியாகும்" என்று கூறியுள்ளார்.

வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தாலிபான் அரசின் பிரதமர் அலுவலகத்தின் தலைமைச் செயலரும் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், "ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது. இந்த வெற்றிக்காக தேசிய கிரிக்கெட் அணி, கிரிக்கெட் வாரியம் மற்றும் அனைத்து ஆப்கானிஸ்தான் குடிமக்களுக்கும் வாழ்த்துகள்" என்று கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in