கால்பந்து உலகக் கோப்பை போட்டி நடத்தும் கத்தார்: கைநிறைய காசு கிடைக்குமா?

கால்பந்து உலகக் கோப்பை போட்டி நடத்தும் கத்தார்: கைநிறைய காசு கிடைக்குமா?

ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி இந்த ஆண்டு கத்தார் நாட்டில் நடக்கிறது. நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடக்கும் இப்போட்டியில், 32 அணிகள் பங்கேற்கின்றன. இதையடுத்து, உலகின் கால்பந்து ரசிகர்களின் கவனம் கத்தார் பக்கம் திரும்பியிருக்கிறது.

ஒலிம்பிக் போட்டிகளைவிடவும், உலகமெங்கும் அதிக கவனத்தைக் குவிப்பது கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள்தான். எனினும், இந்தப் போட்டிகளை நடத்தும் நாடுகளுக்குப் பொருளாதார ரீதியாக என்னதான் பலன் கிடைக்கிறது? பார்க்கலாம்!

கத்தாரில் நடக்கும் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளை, 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரில் கண்டுகளிக்கவிருக்கிறார்கள். கூடவே, நேரலை வழியே உலகமங்கும் உள்ள 500 கோடி பேர் இந்தப் போட்டிகளைப் பார்த்து ரசிக்கவிருக்கிறார்கள். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த போட்டியை நடத்த பில்லியன் கணக்கில் டாலர்களைச் செலவுசெய்கிறது கத்தார்.

பொதுவாகவே, இதுபோன்ற போட்டிகளை நடத்தும் நாடுகள் இதற்கென பிரத்யேகமாக, பெரும் பொருட்செலவில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும். மைதான அரங்குகள், புதிய ஹோட்டல்கள், தங்குமிடங்கள், வாகனம் நிறுத்தும் இடங்கள், கேளிக்கை அரங்குகள், விற்பனையங்கள், சந்தைகள் என ஏராளமானவற்றைத் தொடங்கும்.

போட்டிகள் நடக்கும்வரை அவற்றில் நல்ல கூட்டம் இருக்கும். எனினும், போட்டிகள் முடிவுற்றதும் கூட்டம் கணிசமாகக் குறைந்துவிடும். பெரும்பாலான நாடுகள் இப்படி உருவாக்கிய கட்டிடங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. இதனால், மில்லியன் கணக்கில் போடப்பட்ட முதலீடுகள் வீணாகிக்கிடக்கின்றன.

அதுமட்டுமல்ல, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மூலம் கிடைக்கும் தொகை சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பான ஃபிஃபாவிடமே இருக்கும். உதாரணத்துக்கு 2018 உலகக் கோப்பைப் போட்டியை நடத்திய ரஷ்யாவுக்கு 4.6 பில்லியன் டாலர் தொகை ஒளிபரப்பு உரிமை மூலம் கிடைத்தது. அதை எனினும் ஃபிஃபாவே வைத்துக்கொண்டது. டிக்கெட் விற்பனை, மார்க்கெட்டிங் உரிமை போன்றவற்றின் மூலம் கிடைக்கும் தொகையும் ஃபிஃபாவுக்கே செல்கிறது.

அப்படியெனில், போட்டி நடத்தும் நாடுகள் எப்படிச் சமாளிக்கும்? போட்டியை நடத்துவதற்குக் கணிசமான தொகையை ஃபிஃபா வழங்குகிறது. அதன்படி கத்தாருக்கு 1.7 பில்லியன் டாலரை ஃபிஃபா வழங்குகிறது. அதேசமயம், அதையெல்லாம் விட பல மடங்கு - ஏறத்தாழ 200 பில்லியன் டாலரை கத்தார் செலவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அளவுக்குப் பெரும் தொகையை ஏன் கத்தார் செய்கிறது? இதில் பொருளாதாரப் பலன்களைத் தாண்டி வேறு பல அனுகூலங்களும் கிடைக்கும் என்பதால்தான்.

இப்படி ஒரு போட்டியைத் தங்களால் நடத்த முடியும் என்று உலகுக்குக் காட்டுவதன் மூலம் தங்கள் வலிமையைப் பறைசாற்றிக்கொள்கின்றன நாடுகள். முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விடுக்கப்படும் சமிக்ஞை என்றும் சொல்லலாம். இதுபோன்ற போட்டிகளுக்காகப் பெரும் முதலீட்டில் உருவாக்கப்பட்ட அனைத்தும் முறைப்படி நிர்வகிக்கப்பட்டால், நீண்டகால நோக்கில் நல்ல பலன் தரும். புதிதாகப் போடப்பட்ட சாலைகள், போக்குவரத்து வசதிகள் மூலம் போக்குவரத்து அதிகரித்து, பொருளாதாரமும் வளர்ச்சி பெறும். சுற்றுலாவும் நல்ல வளர்ச்சி பெறும்.

விளையாட்டுப் போட்டிகள் பொதுவாகவே, ஒரு தேசத்துக்குள் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் வளர்க்கக்கூடியவை. கிரிக்கெட் போட்டித் தொடர்களின்போது இந்தியா முழுவதும் வேற்றுமைகளைக் கடந்த ஒற்றுமை நிலை காணப்படும். பகை நாடுகள் எனக் கருதப்படும் நாடுகளுக்கு இடையே கூட நல்லிணக்கம் மலரும். 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின்போது வட கொரியா மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த வீரர்கள் பொதுவான கொடியை ஏந்தியபடி மைதானத்துக்குள் நுழைந்தது இதற்குச் சான்று.

அதுமட்டுமல்ல, சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நாடுகளில் அந்த விளையாட்டு தொடர்பான ஆர்வம் பரவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதில் ஆர்வம் காட்டுவார்கள். சென்னையில் நடந்த சர்வதேச செஸ் போட்டித் தொடர் மூலம் செஸ் விளையாட்டு குறித்த ஆர்வம் குழந்தைகளிடம் அதிகரித்திருப்பதே இதற்குச் சான்று.

பலன் என்பதற்கான அர்த்தம் பணத்தை மட்டும் சார்ந்திருப்பதில்லை அல்லவா!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in