விராட் கோலி: இந்திய கிரிக்கெட்டின் சண்டைக் கோழி-5: அசுர வளர்ச்சியும் ஆபாச சைகை சர்ச்சையும்

விராட் கோலி: இந்திய கிரிக்கெட்டின் சண்டைக் கோழி-5:

அசுர வளர்ச்சியும் ஆபாச சைகை சர்ச்சையும்

சர்வதேசக் கிரிக்கெட்டில், கோலியின் வாழ்க்கையில் ஒளிவீசத் தொடங்கியது 2011 மற்றும் 2012-ம் ஆண்டுகளில்தான். இந்தக் காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களால், கோலியின் பக்கம் காற்று வீசத் தொடங்கியது.

அதற்கு முக்கியக் காரணமாக இருந்த விஷயம், அப்போது அணிக்குள் இருந்த சில கருத்து மோதல்கள். இந்திய கிரிக்கெட் அணிக்கு என்னதான் தன்னிகரில்லாத தலைவராக அப்போது தோனி இருந்தாலும், அவருக்குச் சில சிக்கல்கள் இருந்தன. 2011-ம் ஆண்டுவரை அவரைச் சுற்றிலும் மூத்த வீரர்கள் இருந்தனர். சச்சின் டெண்டுல்கர், லக்‌ஷ்மண், வீரேந்தர் சேவக், கவுதம் காம்பீர், யுவராஜ் சிங், ஜாஹிர் கான், ஹர்பஜன் சிங் என்று அணியில் இருந்த மூத்த வீரர்களைக் கையாள்வதைச் சிக்கலான விஷயமாக தோனி நினைத்திருந்தார். அவர்களை விடுத்து, தான் சொன்னதைக் கேட்கும், தனக்கு விசுவாசமான ஒரு அணியை உருவாக்குவது அவரது முக்கிய நோக்கமாக இருந்தது.


2011  உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையை வென்று கோப்பையைக் கைப்பற்றிய களிப்பில் தோனியும் கோலியும்...
2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையை வென்று கோப்பையைக் கைப்பற்றிய களிப்பில் தோனியும் கோலியும்...

தல’ தோனி ‘தளபதி’ கோலி

2011-ல் உலகக் கோப்பையை வென்றதும், தனது கரம் வலுப்பட, அதற்கான காய்களை நகர்த்தத் தொடங்கினார் தோனி. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அப்போதைய நிர்வாகிகளும் அவருக்கு உறுதுணையாக இருந்தனர். சச்சின் டெண்டுல்கருக்குத் தன்னைவிட ரசிகர் கூட்டம் என்பதால், அவர் மீது மட்டும் தோனி கைவைக்கவில்லை. ஆனால் சேவாக்கையும், காம்பீரையும் மாற்றுவதற்கு நேரம் பார்த்திருந்தார். அதே நேரத்தில், அப்போதைய அதிரடி ஆட்டக்காரர்களான காம்பீர் - சேவாக் இருவரும் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்பதால், தோனிக்கு எதிராக இணைந்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் செய்தியாளர் சந்திப்புகளில் இருவரும் தோனிக்கு எதிராக சில கருத்துகளைக் கூறிவந்தார்கள்.

இதனால், இனியும் பொறுமை காக்க முடியாது என்று அணியில் அதிரடி மாற்றங்களைச் செய்யத் தொடங்கினார் தோனி. இந்தக் காலகட்டத்தில் சச்சின், சேவாக், காம்பீர் ஆகியோரைவிட கோலி அதிக ரன்களைக் குவிக்க, தோனியின் கவனம் அவர் மீது சென்றது. முற்றிலும் இளையவர்களைக் கொண்ட தனது புதிய படையின் தளபதியாக அவரைக் கூர்தீட்டத் தொடங்கினார் தோனி. இந்திய கிரிக்கெட்டின் ‘தல’ தோனி என்றால், அவரது ‘தளபதி’யாக கோலி உருவெடுத்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 2011-ல் 1,381 ரன்களையும், 2012-ல் 1,026 ரன்களையும் குவித்தார். கோலி தந்த பலத்தால் ஒருநாள் போட்டிகளில் சச்சின், சேவாக், காம்பீர் ஆகிய மூத்த வீரர்களில் யாராவது இருவருக்கு மட்டுமே வாய்ப்பளிக்க முடியும் என்று அறிவித்தார் கேப்டன் தோனி. இதில் பல சமயங்களில், காம்பீர் வெளியே அமர வைக்கப்பட்டார்.

எதிரணியினரிடமிருந்து கிடைத்த மரியாதை

“ஒரு பேட்ஸ்மேன் என்றால் அவர் சும்மா வந்து செல்பவராக இருக்கக் கூடாது. அவரைப் பார்த்தாலே எதிரணியின் பந்துவீச்சாளர்களின் வயிற்றில் புளியைக் கரைக்க வேண்டும். அந்த பேட்ஸ்மேனை எப்படி அவுட் ஆக்குவது என்று மூளையைக் கசக்க வேண்டும். அவரது விக்கெட் வீழ்ந்ததைத் திருவிழாபோல் எதிரணியினர் கொண்டாடும் வகையில் இருக்க வேண்டும் என்பது என் கருத்து. 2010 வரை எனக்கு இந்த மரியாதை கிடைக்கவில்லை. ஆனால் 2011 மற்றும் 2012-ம் ஆண்டுக்குப் பிறகு நான் எதிர்பார்த்தது நடந்தது. என் மீது எதிரணியினருக்கு மரியாதை வரத் தொடங்கியது” என்று இந்த ஆண்டுகளைப் பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் விராட் கோலி.


2019 ட்வென்டி 20 சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியின்போது சச்சினுடன் கோலி...
2019 ட்வென்டி 20 சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியின்போது சச்சினுடன் கோலி...

சச்சினின் நம்பிக்கை நட்சத்திரம்

எதிரணியினர் மட்டுமின்றி, கிரிக்கெட் கடவுளாகப் பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கும் இந்தக் காலகட்டத்தில் கோலி மீது மரியாதை பிறந்தது. 2012-ல் நடந்த செய்தியாளர் சந்திப்பில், “சர்வதேசக் கிரிக்கெட்டில் 100 சதங்கள் என்ற உங்களின் சாதனையை யாராவது முறியடிக்க முடியும் என்று கருதுகிறீர்களா?” என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த சச்சின் டெண்டுல்கர், “இந்திய அணியில் இப்போது உள்ள இளம் வீரர்களான ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் நினைத்தால், நிச்சயமாக இந்தச் சாதனையை முறியடிக்க முடியும். அதிலும் விராட் கோலி இப்போது வேகமாகச் சதங்களைக் குவிக்கும்போது அவர் மீதான நம்பிக்கை அதிகமாக உள்ளது” என்று கூறியுள்ளார். இந்தக் காலகட்டத்தில் விராட் கோலி, அதிவேகமாக 7 சதங்களை அடித்ததே இந்த புகழுரைக்கும், சச்சினின் எதிர்பார்ப்புக்கும் காரணமாய் அமைந்தது.

அதே நேரத்தில் அணியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் ஒன்றாக ஷிகர் தவன், ரெய்னா, ரோஹித் சர்மா ஆகியோரை அணிக்குள் இழுத்தார் தோனி. காம்பீர், சேவாக் ஆகியோரால் மாறி மாறி அலங்கரிக்கப்பட்ட துணை கேப்டன் பதவி விராட் கோலியின் தலையை அலங்கரித்தது.

2012 மார்ச் மாதம் டாக்கா நகரில் நடந்த ஆசிய கோப்பைக்கான ஒருநாள் போட்டித் தொடரில், இந்திய அணியிலிருந்து சேவாக் நீக்கப்பட துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார் கோலி. செய்தியாளர்களிடம் இதை அறிவித்த தேர்வுக் குழுத் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், “இந்திய அணிக்கான எதிர்கால கேப்டனை உருவாக்கும் வகையில் விராட் கோலியைத் துணை கேப்டனாக நியமித்துள்ளோம்” என்றார். தேர்வுக்குழுத் தலைவர் மற்றும் கேப்டனின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில், இத்தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 148 பந்துகளில் 183 ரன்களைக் குவித்தார் கோலி. அவரது அதிரடி ஆட்டத்தால், அன்றைய தினம் பாகிஸ்தான் நிர்ணயித்த 330 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இந்தியா எளிதாக எட்டியது.

சர்ச்சையை ஏற்படுத்திய சைகை
சர்ச்சையை ஏற்படுத்திய சைகை

நடுவிரல் சர்ச்சை

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த இந்தக் காலகட்டத்தில், தனக்கே உரிய முன்கோப குணத்தால் சர்ச்சையிலும் சிக்கினார் கோலி. குறிப்பாக, சிட்னி நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் கோலியை வெறுப்பேற்ற, பதிலுக்கு அவர் நடுவிரலைக் காட்டியது சர்ச்சையானது. அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதைத் தொடர்ந்து, போட்டி நடுவரான ரஞ்சன் மடுகல்லே கோலியை விசாரணைக்கு அழைத்தார். என்ன நடக்குமோ என்ற பதற்றத்துடன் அடுத்தநாள் விசாரணைக்குச் சென்றார் கோலி.

(சனிக்கிழமை சந்திப்போம்)

Related Stories

No stories found.