'ஐசிசியின் சிறந்த வீரர்' - விராட் கோலிக்குக் கிடைத்த மற்றொரு பெருமிதம்!

'ஐசிசியின் சிறந்த வீரர்' - விராட் கோலிக்குக் கிடைத்த மற்றொரு பெருமிதம்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அக்டோபர் மாதத்துக்கான ‘சிறந்த ஐசிசி வீரராக’ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடப்பு டி20 உலகக் கோப்பையில் அபாரமான ஃபார்மில் இருக்கும் இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலி, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்தது உட்பட மூன்று அரை சதங்களைப் பதிவு செய்திருக்கிறார். இதனால் அக்டோபர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரராக அவர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். கோலியுடன் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா மற்றும் தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் ஆகியோர் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். ஆனால் அவர்களை பின்னுக்குத் தள்ளி கோலி இப்பெருமையைப் பெற்றுள்ளார்

அக்டோபரில் நான்கு இன்னிங்ஸ்களில் மட்டுமே கோலி பேட் செய்தார். ஆனால் அவர் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான மாயாஜால ஆட்டத்தில் அவர் 82 ரன்கள் எடுத்து இந்தியாவை வெல்ல வைத்தார். மேலும், நெதர்லாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக அரைசதம் அடித்துள்ளார். நடப்பு உலகக்கோப்பை போட்டியில் 5 போட்டிகளில் விளையாடி 246 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் கோலி முதலிடத்தில் உள்ளார்

ஐசிசியால் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பேசிய கோலி, "அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் குழுவால் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டது சிறப்பானதாக உள்ளது. இந்த மாதத்தில் சிறப்பாகச் செயல்பட்ட மற்ற வீரர்களுக்கும், எனது திறனுக்கு ஏற்றவாறு தொடர்ந்து எனக்கு ஆதரவளிக்கும் எனது சக வீரர்களுக்கும் நான் நன்றி செலுத்த விரும்புகிறேன்" என்று கூறினார்.

மகளிர் ஆசியக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தானின் ஆல்-ரவுண்டர் நிடா டார், அக்டோபர் மாதத்தின் சிறந்த மகளிர் வீராங்கனையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in