ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்திய கிரிக்கெட்அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை முந்தி, இந்தியாவின் சார்பில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைக்க விராட் கோலி இன்னும் 207 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கோலி இந்த சாதனையை முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் டி20 தொடரில் இரண்டரை ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மீண்டும் சதம் அடித்தார். அவர் ஆசியக்கோப்பை தொடரில் மொத்தமாக 276 ரன்கள் எடுத்தார். எனவே, இப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் நடக்கும் டி20 தொடரில் அவர் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மற்றொரு மைல்கல்லும் காத்திருக்கிறது.

இந்திய ஜாம்பவான் ராகுல் டிராவிட் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் ஆறாவது இடத்தையும், இந்தியாவில் அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திலும் உள்ளார். 509 போட்டிகளில், 605 இன்னிங்ஸ்களில் 45.41 சராசரியுடன் விளையாடியுள்ள ராகுல் டிராவிட் 24,208 ரன்கள் எடுத்துள்ளார். அவர் அனைத்து வடிவ போட்டிகளிலும் 48 சதங்கள் மற்றும் 146 அரை சதங்களை அடித்துள்ளார்.

விராட் கோலி இதுவரை 478 சர்வதேச போட்டிகளில் விளையாடி 24,002 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 12,344 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 8,074 ரன்களும் எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் 3,584 ரன்களும் குவித்துள்ளார். இன்னும் 207 ரன்கள் எடுத்தால் இந்திய அளவில் 2வது வீரர் என்ற பெருமையையும், ​​சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த ஆறாவது வீரர் என்ற பெருமையையும் பெறுவார்.

விராட் கோலி கடைசியாக 2019 நவம்பரில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்திருந்தார், அதன் பிறகு அவர் தனது அடுத்த சதத்தை ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பதிவு செய்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் அடித்த 71வது சதம் இதுவாகும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in