
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 101 ரன்கள் அடித்து அசத்தினார். இதையடுத்து தென்னாப்பிரிக்காவிற்கு 327 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 37வது ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இந்திய அணிக்கு சிறப்பான துவக்கம் அளித்தனர்.
ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 40 ரன்கள் சேர்த்து இருந்தபோது ஆட்டம் இழந்தார். சுப்மன் கில்லும் 23 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இதையடுத்து இணைந்த விராட் கோலி, ஸ்ரேயாஸ் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து சர்வதேச அரங்கில் தனது 49 வது ஒரு நாள் சதத்தை பூர்த்தி செய்தார். இன்று அவர் தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.
50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. தென்னாபிரிக்க அணி சார்பில் இங்கிடி, ஜான்சன், ரபடா, மஹராஜ், ஷாம்ஸி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதை அடுத்து 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸை துவங்க உள்ளது.