முடிவுக்கு வந்த வெற்றிப் பயணம்

10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானுக்கு வெற்றி கொடுத்த இந்தியா
முடிவுக்கு வந்த வெற்றிப் பயணம்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் மிக நீண்ட வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் முதல்முறையாக 1992-ம் ஆண்டில் சந்தித்தன. அது முதல், நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைக்கு முன்புவரை இந்த 2 அணிகளும் 12 முறை உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேருக்கு நேர் சந்தித்திருந்தன. இதில் ஒருமுறைகூட, பாகிஸ்தானால் இந்தியாவை வீழ்த்த முடிந்ததில்லை. இந்தச் சூழலில் துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில், முதல் முறையாக இந்தியாவை வென்றுள்ளது பாகிஸ்தான். இதன் மூலம் பாகிஸ்தானுடனான இந்திய அணியின் மிக நீண்ட வெற்றிப் பாதை முடிவுக்கு வந்துள்ளது.

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு வரும்போதே, சர்வதேச அரங்கில் தங்களை நிரூபித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது பாகிஸ்தான். சர்வதேச அரங்கில் அந்த அணி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்ததே இதற்கு காரணம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு, அந்நாட்டுக்கு யாரும் கிரிக்கெட் ஆடப் போகவில்லை. அதனால், அந்நாட்டின் பல தொடர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றன.

கடந்த 2 ஆண்டுகளாகத்தான் நிலைமை மாறத் தொடங்கியது. ஒவ்வொரு அணியாக பாகிஸ்தானில் ஆடச் சென்றன. இந்தச் சூழலில் ஆப்கானிஸ்தானை மீண்டும் தாலிபான்கள் பிடிக்க, பாகிஸ்தானிலும் தீவிரவாதத்தின் நிழல் பதிந்தது. அந்நாட்டில் கிரிக்கெட் ஆடச் சென்றிருந்த நியூஸிலாந்து அணி, ஒரு ஆட்டத்தில்கூட ஆடாமல், சொல்லாமல் கொள்ளாமல் திரும்பிச் சென்றது. தீவிரவாத தாக்குதல் பற்றி அச்சம் ஏற்பட்டதால், தாங்கள் திரும்பி வந்ததாக பின்னர் காரணம் சொன்னது. பாகிஸ்தானுக்குச் சென்று ஆடுவதாக இருந்த இங்கிலாந்து அணியும் பின்வாங்கியது.

இப்படி ஒட்டுமொத்த உலகமும் உதாசீனப்படுத்தியதால், தங்களை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் இருந்தது. “நாங்கள் சிறப்பாக ஆடினால் எங்கள் ஊருக்கு வந்து ஒரு தொடரில் ஆடவேண்டும் என்ற எண்ணம் மற்ற அணிகளுக்கு வரலாம். அதனால் இத்தொடரில் சிறப்பாக ஆடுவோம்” என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில் கிரிக்கெட் உலகில் எல்லோருக்கும் செல்லப்பிள்ளையாக இருக்கும், சர்வதேச கிரிக்கெட்டில் தனது கையை ஓங்க வைத்திருக்கும் இந்திய அணி, சற்று அலட்சியமாக இப்போட்டியை எதிர்கொண்டதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. உலகக் கோப்பையில் தங்களை பாகிஸ்தானால் ஜெயிக்க முடியாது என்ற அதீத தன்னம்பிக்கைகூட, இந்தியாவுக்கு தோல்வியைத் தந்திருக்கலாம்.

உலகின் மிக வலிமையான பேட்டிங் வரிசை கொண்ட இந்திய அணி நேற்று ரோஹித் சர்மா (0), கே.எல்.ராகுல் (3), சூர்யகுமார் யாதவ் (11) ஆகியோரின் விக்கெட்டை அடுத்தடுத்து இழக்க, ஒரு கணம் தடுமாறி நின்றது. 31 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற இக்கட்டான நிலையில் இருந்து கேப்டன் கோலியும் (57), ரிஷப் பந்த்தும் (39 ரன்கள்) ஓரளவு மீட்டனர். ஆனால், கடைசி கட்டத்தில் மீண்டும் விக்கெட்கள் சரிந்ததால், சிறந்த ஸ்கோரை எட்ட முடியவில்லை. பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்காக 152 ரன்களை மட்டுமே இந்தியாவால் வைக்க முடிந்தது.

பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் இந்தியா சிறந்த அணிதான். ஆனால், நேற்று அதுவும் சொதப்பியது. எத்தனையோ முயற்சிகள் செய்தும் முகமது ரிஸ்வான் - பாபர் அசாம் தொடக்க ஜோடியை இந்தியப் பந்துவீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. இதன் விளைவாக 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது. இந்த 2 நாடுகளின் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி, இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இதுவே முதல் முறை.

இந்திய அணியைப் பொறுத்தவரை நடந்து முடிந்த ஆட்டத்தைப் பற்றி யோசித்துக்கொண்டு இருக்காமல், இனி நடக்கப்போகும் ஆட்டங்களுக்கு திட்டமிட வேண்டும். அடுத்த ஆட்டம் நியூஸிலாந்துக்கு எதிராக, வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ளது. சரியாக ஒரு வாரம் இடைவெளி உள்ள நிலையில், அதற்கு திட்டமிட வேண்டும். பாகிஸ்தானிடம் தோற்றதற்கு பிராயச்சித்தமாக உலகக் கோப்பையை கொண்டுவர வேண்டும். பல தொடர்களில் முதல் போட்டியில் தோற்று கோப்பையை வாங்கியுள்ளது இந்தியா. இந்த முறையும் நம்மவர்கள் அப்படி அசத்துவார்கள் என்று எதிர்பார்ப்போம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in