இந்தியாவுடன் இன்று பலப்பரீட்சை - பதிலடி கொடுக்குமா பாகிஸ்தான்: வெல்லப்போவது யார்?

இந்தியாவுடன் இன்று பலப்பரீட்சை - பதிலடி கொடுக்குமா பாகிஸ்தான்: வெல்லப்போவது யார்?

ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியாவும் , பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆசியக்கோப்பையின் லீக் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை அபாரமாக வீழ்த்தியது இந்தியா. இந்த நிலையில் ஒரே வாரத்தில் மீண்டும் இரு அணிகளும் மோதிக்கொள்ளவுள்ளன.

இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலி, சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் புவனேஷ்குமார் அசத்தி வருகிறார். ஆனால் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். பீல்டிங்கிலும் இந்திய அணி கவனம் செலுத்த வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான், அர்ஷ் தீப் ஆகியோரும் இந்த தொடரில் இன்னும் சோபிக்கவில்லை.

பாகிஸ்தான் அணியில் நட்சத்திர ஆட்டக்காரர் கேப்டன் பாபர் அசாம் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்புவது அந்த அணிக்கு பெரிய பின்னடைவு. மற்றபடி முகமது ரிஸ்வான், பஹர் ஜமான், குஷ்தில் ஷா ஆகியோர் சிறப்பாக பேட் செய்து வருகின்றனர். பந்துவீச்சிலும் ஷதப் கான், முகமது நவாஸ், நசீம் ஷா உள்ளிட்டோர் கலக்கி வருகின்றனர். இதனால் பாகிஸ்தான் அணியும் தெம்பாக களம் இறங்குகிறது.

லீக் சுற்றினை போலவே இந்தப் போட்டியிலும் பாகிஸ்தானை சுருட்ட வேண்டும் என இந்திய அணியும், லீக் சுற்று தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் அணியும் முனைப்புடன் உள்ளன. இதுவரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 10 டி20 போட்டிகளில் நேரடியாக மோதியுள்ளன. இதில் 8 போட்டிகளில் இந்தியாவும், 2 போட்டிகளில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஒரு வித பரபரப்பு தொற்றிக்கொள்ளும். எனவே இன்றைய போட்டியிலும் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in