டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: வெற்றி வாய்ப்பு எப்படி?

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: வெற்றி வாய்ப்பு எப்படி?

அடுத்த மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள வீரர்களின் தற்போதைய பார்ம் குறித்து பார்ப்போம்...

8-வது டி 20 உலக கோப்பை போட்டி அக்டோபர் 16 ம் தேதி தொடங்கி நவம்பர் 13 ம் தேதி வரை ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் நடக்கிறது. இந்த டி 20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.

ஆசியக்கோப்பை தொடரில் இறுதிச்சுற்றுக்குக் கூட முன்னேற முடியாமல் இந்திய அணி வெளியேறியது. இந்த சூழலில் 20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ரோகித் ஷர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் கொண்ட 15 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முகமது ஷமி, ஸ்ரேயாஸ் அய்யர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர் ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்

ஆசியக்கோப்பை போட்டியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஹர்திக் பாண்ட்யா, ரோகித் ஷர்மா உள்ளிட்டோர் பார்மில் இருந்தனர். ஆனால் இவர்கள் சில போட்டிகளில் சிறப்பாக விளையாடினார்கள், சில போட்டிகளில் விளையாடவில்லை. தொடர் முழுவதும் கோலி மட்டும் சிறப்பாக விளையாடினார். எனவே தற்போதைய சூழலில் இந்திய அணியின் பேட்டிங் பார்ம் மோசமாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை புவனேஷ்குமார் மட்டுமே நன்றாக செயல்பட்டார். மற்ற அனைவரின் பவுலிங்கும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இந்த இக்கட்டான சூழலில் காயம் காரணமாக ஆசியக்கோப்பையில் விளையாடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகியோர் டி20 உலக்கோப்பையில் இடம்பெற்றுள்ளது பெரும் பலமாக இருக்கும்.

அதேபோல ஆசியக்கோப்பையில் இந்திய அணியின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது. இதன் காரணமாகவே சில ஆட்டங்களில் இந்தியா தோற்றது எனவும் கிரிக்கெட் விமர்சகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதுபோல பவுலர்கள் அதிக எக்ஸ்ட்ராஸ்களை கொடுப்பதும் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. இதையெல்லாம் தற்போது உள்ள அணி சரிசெய்தால் மட்டுமே உலகக்கோப்பை கனவு சாத்தியமாகும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in