சூர்யகுமார் யாதவின் புதிய சாதனை: அதிரடி சிக்சர் மன்னனின் அபாரம்!

சூர்யகுமார் யாதவின் புதிய சாதனை: அதிரடி சிக்சர் மன்னனின் அபாரம்!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் 2022ம் ஆண்டில் டி20 போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையையும், அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளார்.

நேற்று மெல்போர்னில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியின் போது சூர்யகுமார் 25 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்தார். இதன் மூலமாக இந்த ஆண்டு 28 டி20 போட்டிகளில் அவர் மொத்தம் 1026 ரன்கள் எடுத்துள்ளார். எனவே ஒரு ஆண்டில் டி20 போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையை சூர்யகுமார் பெற்றுள்ளார். அதுபோல உலக அளவில் ஒரு காலண்டர் ஆண்டில் டி20 போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த 2வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் இந்த ஆண்டு 23 டி20 போட்டிகளில் விளையாடி 924 ரன்கள் குவித்து இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். ரிஸ்வான் 2021ல் 29 போட்டிகளில் விளையாடி 1326 ரன்கள் எடுத்து ஒட்டுமொத்தமாக ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார், சூர்யகுமார் 1026 ரன்களுடன் இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையின் ஐந்து போட்டிகளில் விளையாடி மூன்று அரைசதம் அடித்துள்ள சூர்யகுமார், 225 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளார். இப்பட்டியலில் 246 ரன்களுடன் விராட் கோலி முதலிடத்திலும், நெதர்லாந்து வீரர் மேக்ஸ் ஓ டாவ்ட் 242 ரன்களுடன் 2ம் இடத்திலும் உள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை 59 சிக்ஸர்கள் மற்றும் 93 பவுண்டரிகளை சூர்யகுமார் அடித்துள்ளார். ஒரு காலண்டர் ஆண்டில் டி20 போட்டிகளில் அதிகபட்ச சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் சூர்யகுமார் தக்கவைத்துள்ளார். அவர் தற்போது டி20 போட்டிகளில் 863 ரேட்டிங் புள்ளிகளுடன் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in