ரஷ்யாவுக்கு அடுத்தடுத்து தடை: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் அதிரடி

ரஷ்யாவுக்கு அடுத்தடுத்து தடை: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் அதிரடி

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு நாடுகள் பொருளாதார தடை விதித்து வரும் நிலையில், ரஷ்யாவுடன் நடைபெற இருக்கும் அனைத்து விளையாட்டு போட்டிகளையும் ரத்து செய்ய வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விளையாட்டு சங்கங்களை கேட்டுக் கொண்டுள்ளது.

ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருக்கும் நிலையில், உக்ரைன் மீது இன்று 6வது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை உலக நாடுகள், ஐநா கண்டித்து வருகிறது. இதனிடையே, மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீதான தடைகளை அதிகரித்து கொண்டே செல்கின்றன. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய கனடா அரசு தடை விதித்துள்ளதோடு, டேங்கர் முறிப்பு ஆயுதங்கள், ராக்கெட்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை மிக விரைவில் உக்ரைனுக்கு அனுப்பி வைப்போம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

இந்நிலையில், உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யாவுடன் விளையாட மாட்டோம் என்று போலந்து அறிவித்துவிட்டது. இதனிடையே, பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யா பெயர், கொடி பயன்படுத்த பிஃபா தடை விதித்துள்ளதோடு, சர்வதேச கால்பந்து போட்டிகளில் ரஷ்ய அணி விளையாட சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு தடை விதித்துள்ளது. மேலும் ரஷ்ய கிளப் அணிகள் விளையாட ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பும் தடை விதித்துள்ளது. உலக ரக்பி போட்டிகளில் ரஷ்யா, பெலாரஸ் பங்கேற்க தடை விதித்து உலக ரக்பி நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. அதோடு, ஐஸ் ஹாக்கி விளையாட்டு போட்டியை நடத்தும் உரிமையை ரஷ்யாவிடம் இருந்து சர்வதேச ஐஸ் ஹாக்கி கூட்டமைப்பு பறித்துள்ளது.

இதனிடைேய, ‘ரஷ்யா, பெலாரஸ் நாடுகளில் நடைபெற இருக்கும் அனைத்து விளையாட்டு போட்டிகளையும் ரத்து செய்ய வேண்டும்’ என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விளையாட்டு சங்கங்களை கேட்டுக் கொண்டுள்ளது. தொடர்ந்து ரஷ்யா மீது சர்வதேச விளையாட்டுத்துறையும் நடவடிக்கை எடுத்து வருவது அந்நாட்டுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in