இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்த இன்னிங்ஸில் இளம் இந்திய வீரர் சுப்மன் கில் சதமடித்து அசத்தியிருக்கிறார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் கடந்த 2ம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
முதல் இன்னிங்ஸில் 209 ரன்கள் குவித்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணி கௌரவமான ஸ்கோரை எட்ட உதவினார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 396 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியின் ஜாக் கிராவ்லி அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார், மற்ற வீரர்கள் ரன் சேர்க்க தடுமாறினர்.இந்திய பந்துவீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவின் அசுர வேக பந்துவீச்சில் இங்கிலாந்து வீரர்கள் நிலை குலைந்தனர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்சில் 253 ரன்களில் சுருண்டது. பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் 17 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். முதல் இன்னிங்ஸை போலவே இந்த இன்னிங்ஸிம் ரோகித் ஷர்மா வெறும் 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஸ்ரேயஸ் ஐயர், ரஜத் பாடிதார் ஆகியோரும் பெரிதாக ஆடவில்லை. ஆனால் நிலையாக ஆடிய ஷூப்மன் கில் 147 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். இதன் மூலமாக டெஸ்ட் போட்டியில் தனது 3 வது சதத்தை கில் பதிவு செய்தார்.
சுப்மன் கில் ஆட்டமிழந்த பின்னர் அக்சர் படேல் (45 ரன்கள்), அஸ்வின் (29 ரன்கள்) மட்டுமே ஓரளவு குறிப்பிடும்படி ஆடினர். இதனால் இந்திய 2ம் இன்னிங்ஸில் 255 ரன்களில் சுருண்டது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக டாம் ஹார்ட்லி 4 விக்கெட்டுகளையும், ரேஹன் அகமது 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து இந்திய அணி இந்த டெஸ்டில் 389 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இப்போது இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.