முரட்டுத்தனமான ஃபார்மில் ஹைதராபாத் அணி.... வெறும் 58 பந்துகளில் 167 ரன்களை எடுத்து வெற்றி!

டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா
டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா

ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 9.4 ஓவர் முடிவில் 167 ரன்கள் விலாசி ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லீக் சுற்று ஆட்டங்கள் சற்றேறக்குறைய நிறைவடையவுள்ளது. 57வது போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியில் ஆயுஷ் படோனி 55 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 48 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அந்த அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்திருந்தது. ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட் களையும், பேட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.

டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா
டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா

இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களம் இறங்கியது. இம்பாக்ட் பிளேயராக களமிறக்கப்பட்ட அபிஷேக் ஷர்மாவுடன், டிராவிஸ் ஹெட் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். லக்னோ அணி வீரர்களின் பந்துகளை இந்த இரு வீரர்களும் பௌண்டரிகளுக்கு விரட்டி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 8 பெளண்டரி, 8 சிக்சர்கள் உட்பட 89 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். இதேபோல் அபிஷேக் ஷர்மா 8 பெளண்டரிகள், 6 சிக்சர்களுடன் 28 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். இதன் மூலம் 9.4 ஓவர் முடிவிலேயே அந்த அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கான 167 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டார்.

ஹைதராபாத் அணி வீரர்கள்
ஹைதராபாத் அணி வீரர்கள்

இந்த போட்டியின் மூலம் பல்வேறு புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் போட்டி ஒன்றில் 10 ஓவர்களுக்கு முன்பாகவே வெற்றி இலக்கை எட்டிய அணி என்ற சாதனையை ஹைதராபாத் அணி பதிவு செய்தது. இதேபோல் ஒரு சீசனில் அதிக சிக்ஸர்கள் விளாசிய அணி என்ற சிஎஸ்கே அணியின் சாதனையை ஹைதராபாத் அணி பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி நடப்பு தொடரில் 146 சிக்சர்களை விளாசி உள்ளது. இதற்கு முன்பாக 2018ம் ஆண்டு சிஎஸ்கே அணி 145 சிக்சர்களும், 2019ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 143 சிக்சர்களும் விளாசி உள்ளன.

போட்டி முடிவு குறித்து கருத்து தெரிவித்த ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கமின்ஸ், ”நடப்பு ஐபிஎல் தொடரில் எங்கள் அணி வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால் 10 ஓவர்களுக்குள் ஆட்டத்தை முடித்தது விசித்திரமானது” என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in