அடியோ அடி... இங்கிலாந்து 170 ரன்னுக்கு அவுட்; தென் ஆப்பிரிக்கா 229 வித்தியாசத்தில் வெற்றி!

அடியோ அடி... இங்கிலாந்து 170 ரன்னுக்கு அவுட்; தென் ஆப்பிரிக்கா 229 வித்தியாசத்தில் வெற்றி!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 19-வது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் - ஹென்றிக்ஸ் களமிறங்கினர். அதிரடி ஆட்டக்காரர் டிகாக் 4 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதனையடுத்து ஹென்றிக்ஸ் -ரஸ்ஸி வான் டெர் டுசென் ஜோடி சிறப்பாக ஆடினர்.

தென் ஆப்பிரிக்கா அணி 125 ரன்கள் இருந்த போது இந்த ஜோடி பிரிந்தது. ரஸ்ஸி வான் டெர் டுசென் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து ஹென்றிக்ஸ் 85 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்க்ரம் 42 ரன்னிலும், மில்லர் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது தென் ஆப்பிரிக்கா அணியின் ஸ்கோர் 36.3 ஓவரில் 243 ரன்களாக இருந்தது.

இதனையடுத்து கிளாசன் மற்றும் யான்சன் ஜோடி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சரமாரியாக விளாசினர். அதிரடியாக விளையாடிய கிளாசன் சதமும் யான்சன் அரைசதம் அடித்து அசத்தினார். சதம் விளாசிய கிளாசன் 109 ரன்களில் அவுட் ஆனார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த யான்சன் 75 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 399 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் டாப்லி 3 விக்கெட்டும் ஆதில் ரஷித் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ், ப்ரூக் ஆகிய அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளதால், பெரிய இலக்காக இருந்தாலும் ஆட்டம் விறுவிறுப்பாக செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்து அணிக்கு தொடக்க தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தென் ஆப்பிரிக்க அணியின் அபார பந்துவீச்சால் ஜானி பேர்ஸ்டோ (10), டேவிட் மலன் (6), ஜோ ரூட் (2), பென் ஸ்டோக்ஸ் (5), ஹாரி புரூக் (17), கேப்டன் ஜாஸ் பட்லர் (15) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இங்கிலாந்து அணி 100 ரன்களை எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இங்கிலாந்து அணியின் நம்பிக்கை முழுவதுமாக சரிந்தது. எனினும், கடைசியில் அட்கின்சன் மற்றும் மார்க் வுட் ஆகியோர் சில பவுண்டரிகளை விளாசினர். இந்த ஜோடி 34 பந்துகளில் 70 ரன்களை குவித்தது. அட்கின்சர் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மார்க் வுட் 17 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 43 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். காயம் காரணமாக டாப்லி களமிறங்கவில்லை.

இறுதியில் இங்கிலாந்து அணி 22 ஓவர்களில் 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் கோட்சே 3 விக்கெட்டுகளையும், ரபாடா, இங்கிடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இங்கிலாந்து அணிக்கு இது மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது. அத்துடன், ரன்ரேட்டும் மிகப்பெரிய அளவில் சரிந்ததால், புள்ளிப்பட்டியலில் 9வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in