மண்டியிட மறுத்த வெள்ளையின வீரர்

கிரிக்கெட்டிலும் பரவுகிறதா இனவெறி?
தென் ஆப்பிரிக்கக் கிரிக்கெட் வீரர் குயின்டன் டீ காக்
தென் ஆப்பிரிக்கக் கிரிக்கெட் வீரர் குயின்டன் டீ காக்

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்றுவரும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைத் தாண்டி, ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ (கறுப்பினத்தவர் உயிர் முக்கியமானது) இயக்கத்துக்கான ஆதரவுக் குரல்கள் உரக்க ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. ஒருபுறம், கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்பாக வீரர்கள் மைதானத்தில் மண்டியிட்டு வெளிப்படுத்தும் ஆதரவுக்கரம், உலகில் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைந்து வருகிறது. இன்னொருபுறம், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் குயின்டன் டீ காக் மண்டியிட மறுத்த நிகழ்வு, கிரிக்கெட் பரபரப்பையும் தாண்டி விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

நவீன உலகிலும் ஏதாவது ஓரிடத்தில் இனவெறி எட்டிப் பார்ப்பது இப்போதும் வாடிக்கைதான். கடந்த காலங்களில் சக மனிதர்களையே குரூரமாகக் கொல்லவும் அடிமைகளாக்கிச் சித்ரவதை செய்யவும் வைத்திருக்கிறது இனவெறி. சரி, இனவெறி தொடர்பான கருத்துக்கும் தற்போது நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இனவெறிக்கு எதிராகத் திரளும் தார்மிகக் குரல்களுக்கும் என்ன தொடர்பு என்று நினைக்கிறீர்களா? இனவெறிக்கு எதிராக வீரர்கள் மண்டியிடும் நிகழ்வின் பின்னணி என்ன என்ற கேள்வியும் உங்களுக்குள் ஏற்பட்டிருக்கிறதா? இந்த நிகழ்வு, திடீரென விளையாட்டுப் போட்டிகளில் ஏற்படவில்லை. மண்டியிடும் நிகழ்வுக்கும் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ இயக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

அமெரிக்காவில் தொடங்கிய முழக்கம்

கடந்த 2012-ம் ஆண்டில், அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தின் சான்ஃபோர்டு நகரில் ஆப்பிரிக்க அமெரிக்கப் பள்ளி மாணவரான டிரெய்வான் மார்ட்டின் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய ஜார்ஜ் சிம்மர்மேன், 2013-ல் விடுவிக்கப்பட்டதை அடுத்து, ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்ற இயக்கம் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. இதேபோல 2014-ல், அமெரிக்காவில் காவல் துறையினரின் அத்துமீறலில் மைக்கேல் பிரவுன், எரிக் கார்னர் என்ற ஆப்பிரிக்க அமெரிக்க இளைஞர்கள் உயிரிழந்தனர். இதை எதிர்த்து ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ இயக்கத்தினர் அமெரிக்காவில் பல கட்டப் போராட்டங்களை நடத்தினர். அமெரிக்காவில் தொடங்கிய இந்த இயக்கம் படிப்படியாக வளர்ந்து, தற்போது 30 நாடுகளில் கிளை பரப்பியுள்ளது. இனச் சமத்துவம், பாகுபாடு காட்டாமை, இனவெறி குரூரங்களை எதிர்ப்பது போன்றவற்றை உள்ளடக்கியதுதான் இந்த அமைப்பின் நோக்கங்கள்.

இப்போது விளையாட்டுக்கு வருவோம். 2016-ல், அமெரிக்காவில் நடந்த கால்பந்துப் போட்டியில் கறுப்பின மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து அமெரிக்க வீரர், காலின் கபெர்நிக் தேசியக் கொடிக்கு எழுந்து நின்று மரியாதை செய்ய மாட்டேன் என்று அதிரடியாக அறிவித்தார். தேசிய கீதம் ஒலித்தபோது, காலின் கபெர்நிக்கும் அவருக்கு ஆதரவு தெரிவித்த மற்ற வீரர்களும் மண்டியிட்டு இனவெறிக்கு எதிராகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்தனர். அப்போது முதலே நிறவெறி மட்டுமல்ல, எந்த வகையிலும் மனிதர்கள் இடையே பாகுபாடு காட்டக் கூடாது என்பதை வலியுறுத்தியும் இனவெறியால் பாதிக்கப்படுவோருக்கு ஆதரவுக்கரம் நீட்டவும் பெரிய விளையாட்டுத் தொடர்களில் மண்டியிட்டு, இனவெறிக்கு எதிராக உறுதிமொழி எடுப்பதை வீரர்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.

தொடங்கிவைத்த பாண்ட்யா

கடந்த ஆண்டு அமெரிக்காவில், கறுப்பின இளைஞர் ஜார்ஜ் ஃபிளாய்டின் கழுத்தை காவல் துறை அதிகாரி முழங்காலால் நெரித்துக் கொன்ற விவகாரம், உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது, ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ அமைப்பின் முக்கியத்துவம் பெரிய அளவில் வெளிப்பட்டது. இதன் பிறகு அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் விளையாட்டுத் தொடர்கள் நடக்கும்போதெல்லாம் மண்டியிடும் நிகழ்வும் வாடிக்கையாகிவிட்டது. கிரிக்கெட்டில் இது பெரிய அளவில் கவனம் ஈர்க்காத நிலையில், கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் ஹர்திக் பாண்ட்யா, அரை சதம் அடித்ததும் மைதானத்தில் மண்டியிட்டு, இனவெறிக்கு எதிரான பிரச்சாரத்துக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

தற்போது டி20 போட்டிகளில் சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) பரிந்துரையின் பேரில், அனைத்து அணி வீரர்களும் மண்டியிட்டு இனவெறிக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடியபோது, போட்டி தொடங்குவதற்கு முன்பாக நம் வீரர்கள் மண்டியிட்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இதேபோல, மற்ற அணிகள் விளையாடும்போதும் மண்டியிடும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சில நேரங்களில் வெள்ளையின வீரர்கள் மண்டியிட மறுக்கும் சம்பவங்களும் உலகில் பல இடங்களில் நடந்தேறியிருக்கிறது.

ஒத்துழைக்க மறுத்த டீ காக்

அது, இந்த 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டிலும் நடந்தேறியிருக்கிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய அம்சம். ஆம்! இனவெறிக்கு எதிராக இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து என மேற்கத்திய நாட்டு வீரர்களே மண்டியிடும் நிலையில், தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டீ காக் மறுத்த நிகழ்வு பேசுபொருளாகியிருக்கிறது. அதுவும் நிறவெறியால் 1960-களில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடு, தென் ஆப்பிரிக்கா. இதனால், சர்வதேச சமூகம் தென் ஆப்பிரிக்காவைத் தனிமைப்படுத்திய நிகழ்வும் நடந்தேறியது. இதற்காக 1964 முதல் 1991 வரை சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்தும் தடை செய்யப்பட்டது தென் ஆப்பிரிக்க அணி. இப்படியான பின்னணி உள்ள ஒரு நாட்டிலிருந்து வந்த வீரர், மண்டியிட மறுத்ததன் மூலம், கறுப்பின மக்களுக்கு எதிரான மனநிலையில் டீ காக் இருக்கிறார் எனும் விமர்சனம் எழுந்திருக்கிறது. நிறவெறி பிடித்தவர் எனப் பலரும் அவரைக் கண்டித்திருக்கிறார்கள்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில், கடைசி நேரத்தில் முட்டிப்போட டீ காக் மறுத்த நிலையில், உடனடியாக அணியிலிருந்தே அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு எதிராகத் தென் ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் இருந்து கண்டனக் குரல்கள் குவிந்தன. 1991-ல் சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா காலடி எடுத்து வைத்த பிறகு, அந்த அணியில் வெள்ளை, கறுப்பின வீரர்கள் போட்டியில் பங்கேற்பதில் சமத்துவமின்மை இருப்பதாகப் பேசப்பட்டு வந்தது. அதைக் களையும் வகையில் இடஒதுக்கீடு (கோட்டா) முறை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் அமலாக்கப்பட்டது. 11 பேர் கொண்ட அணியில் 5 பேர் கறுப்பின வீரர்களாக இருக்க வேண்டும் என்பதை தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் சங்கம் விதி ஆக்கியுள்ளது. இதனால், வெள்ளையின வீரர்களின் வாய்ப்பு பறிபோவதாகவும் குரல்கள் அங்கு எழுவதுண்டு. அதையொட்டிதான் டீ காக் மண்டியிட மறுத்தார் என்ற கோணத்திலும் விஷயங்கள் அலசப்பட்டன.

விளக்கமும் கேள்விகளும்

நிலைமை தீவிரமடைவதை உணர்ந்த டீ காக், தற்போது அதற்கு மன்னிப்பு கேட்டு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தன் நிலையை உருக்கமாகவும் வெளிப்படுத்தியுள்ளார். “நான் மண்டியிட்டு ஆதரவு கொடுக்காததற்கு மன்னிப்பு கோருகிறேன். கறுப்பின மக்களுக்குத் துணையாக நிற்க வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமென்றும் எனக்குத் தெரியும். யாரையும் காயப்படுத்த வேண்டும் என்பதற்காக இதைச் செய்யவில்லை. அப்படி காயப்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுங்கள். நானும் கறுப்பின பிரச்சினையில் பாதிக்கப்பட்டவன்தான். என் குடும்பத்தில், 2-வது தாயார் கறுப்பினத்தைச் சேர்ந்தவர். இனவெறியின் தீவிரத்தை சிறுவயதிலேயே பார்த்தவன். நான் எப்படிபட்டவன் என்பது எல்லோருக்கும் தெரியும். என்னை இனவெறி பிடித்தவன் என்று கூறியது வேதனை அளிக்கிறது. இனிவரும் போட்டிகளில் மண்டியிட்டு ஆதரவு கொடுப்பேன்” என்று டீ காக் விளக்கமளித்திருக்கிறார். என்றாலும், அவர் மண்டியிட்டு ஆதரவு தெரிவிக்க மறுத்ததற்கு என்ன காரணம் என்பதை விளக்கவில்லை. அதை டீ காக் சொல்லும்வரை அவர் மீது சந்தேகப் பார்வையும், விமர்சனமும் நிச்சயம் தொடரவே செய்யும் என்பதே நிதர்சனம்.

விளையாட்டு என்பது உலக மக்களின் மனங்களை இணைப்பது. கிரிக்கெட்டில் மண்டியிடும் நிகழ்வானது, இனவெறிக்கு எதிரான அகிம்சை போரில் ஒரு முன்முயற்சி. உலகில் நடக்கும் இனவெறி அடக்குமுறைகளுக்கு எதிராக சகல வீரர்களும் ஓரணியில் திரளும்போது, அதில் எல்லாருமே ஓர் அங்கமாக இருக்க வேண்டும். அதுதான் எல்லோருடைய ஆசை!

பெட்டிச் செய்தி

மண்டியிடுவது ஏன்?

இனவெறிக்கு எதிராக மண்டியிடும்போது, முழங்காலை நிலத்தில் பதித்தும், இன்னொரு காலை மடக்கி நிலத்தில் பதிப்பத்தையும் பார்த்திருப்பீர்கள். இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில், கறுப்பினத்தவர்களை வெள்ளையினத்தவர்கள் அடிமைகளாக நடத்தினர். அப்போது கறுப்பினத்தவர்களின் ஒரு காலையும் ஒரு கையையும் சங்கிலியால் பிணைத்துவிடுவார்கள். இதனால், அவர்களால் எழுந்து நிற்க முடியாது. நிற்க வேண்டும் என்றாலே, முழங்காலை நிலத்தில் பதிக்க வேண்டும். இன்னொரு காலை மடக்கி நிலத்தில் பதிக்க வேண்டும். அதைத்தான் வெளிப்படுத்துகிறது மண்டியிடும் முறை (Taking the Knee).

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in