கங்குலி ஏன் ஒதுக்கப்படுகிறார்? - ஐசிசி தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும்: பிரதமருக்கு மம்தா கோரிக்கை

கங்குலி ஏன் ஒதுக்கப்படுகிறார்? - ஐசிசி தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும்: பிரதமருக்கு மம்தா கோரிக்கை

பிசிசிஐ தலைவராக உள்ள சவுரவ் கங்குலியை ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) தேர்தலில் போட்டியிட அனுமதிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கடந்த 3 ஆண்டுகளாக சவுரவ் கங்குலி பதவி வகித்தார். பிசிசிஐ-யின் செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பதவி வகிக்கிறார். சமீபத்தில் பிசிசிஐ விதிகளில் திருத்தம் மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதியளித்ததால், இவர்கள் தொடர்ந்து பதவியில் நீடிக்கலாம் என்ற நிலை இருந்தது.

சவுரவ் கங்குலியின் பதவிகாலம் அடுத்த வாரத்துடன் நிறைவடையும் நிலையில், பிசிசிஐக்கு கர்நாடகத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி தலைவராக தேர்வாகவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கங்குலி அதிரடியாக பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “சவுரவ் கங்குலி நியாயமற்ற முறையில் வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் மீது என்ன தவறு இருக்கிறது?. நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன், நான் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்தேன். சௌரவ் கங்குலி மிகவும் பிரபலமான ஆளுமை. அவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அவர் நாட்டிற்கு நிறைய பெருமைகளைக் கொடுத்தார். அவர் மேற்கு வங்கத்தின் பெருமை மட்டுமல்ல இந்தியாவின் பெருமை. அவர் ஏன் இப்படி நியாயமற்ற முறையில் ஒதுக்கப்பட்டார்” என்று கூறினார்.

மேலும், " கங்குலி பிசிசிஐ தலைவர் பதவியை சிறப்பாக நிர்வகித்தார். எனவே அவரை தவறான முறையில் வெளியேற்றுவது சரில்லை. பிரதமருக்கு எனது பணிவான வணக்கங்கள். ஐசிசி தேர்தலில் போட்டியிட சவுரவ் கங்குலி அனுமதிக்கப்பட வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை வைக்கிறேன். அவர் அரசியல் தலைவர் கிடையாது, எனவே இதை அரசியலாக கருதாமல் விளையாட்டு என கருதுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி ஐசிசி தலைவராக தொடர விரும்புவதாகவும், ஆனால் பிசிசிஐ உறுப்பினர்கள் இதற்கு ஆதரவளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஐசிசி தலைவர் பதவிக்கான வேட்புமனுக்கள் அக்டோபர் 20ம் தேதி தாக்கல் செய்யப்பட வேண்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in