வர்ணனைக்குத் திரும்பிய ரவி சாஸ்திரி: மீண்டும் பயிற்சியாளர் ஆவாரா?

வர்ணனைக்குத் திரும்பிய ரவி சாஸ்திரி: மீண்டும் பயிற்சியாளர் ஆவாரா?

இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான ரவி சாஸ்திரி, பல ஆண்டுகளாகப் பயிற்சியாளராகப் பணிபுரிந்த நிலையில் தற்போது பல ஆண்டுகளுக்குப் பின்னர் கிரிக்கெட் வர்ணனையாளராகச் செயல்படத் தொடங்கியிருக்கிறார். இந்நிலையில், மீண்டும் அவர் பயிற்சியாளர் பணிக்குத் திரும்புவாரா என்று எழுந்த கேள்விக்கு அவர் சுவாரசியமான பதிலைத் தந்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்தபோது அவருக்குப் பக்கபலமாக இருந்த ரவி சாஸ்திரி, ஆஸ்திரேலிய மண்ணில் அந்நாட்டு அணியை டெஸ்ட் தொடரில் வெல்ல வழிவகுத்தார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 2 -1 என இந்தியா முன்னிலை பெற வழிவகுத்தார். இப்படிப் பல வகைகளில் இந்திய அணியை வழிநடத்தி வந்த ரவி சாஸ்திரி, கிரிக்கெட் வரணனையாளராக மீண்டும் செயல்படத் தொடங்கியிருக்கிறார்.

2020-ல் முதன்முறையாக சாலைப் பாதுகாப்பு உலக கிரிக்கெட் டி-20 போட்டி நடந்தது. அந்தப் போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி வெற்றி பெற்றி கோப்பையைக் கைப்பற்றியது. இதன் இரண்டாவது உலகக் கோப்பைப் போட்டி, செப்டம்பர் 10-ல் கான்பூர் நகரில் தொடங்கியது. இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், இங்கிலாந்து போன்ற அணிகள் இதில் கலந்துகொள்கின்றன. கான்பூர், இந்தூர், டெஹ்ராடூன், ராய்ப்பூர் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடக்கின்றன. இதன் அரை இறுதிப் போட்டிகளும், இறுதிப் போட்டியும் ராய்ப்பூரில் நடக்கவிருக்கின்றன.

தற்போது நடந்துவரும் சாலைப் பாதுகாப்பு உலக கிரிக்கெட் டி-20 போட்டித் தொடரில், மேட்ச் ஆணையராக இருக்கும் ரவி சாஸ்திரி, வர்ணனையாளராகவும் பணிபுரிந்துவருகிறார்.

இந்நிலையில், ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளராக வருவாரா எனும் கேள்வி எழுந்திருக்கிறது. இது தொடர்பாக ‘ஸ்போர்ட்ஸ் டுடே’ இதழுக்கு அளித்த பேட்டியில், “பயிற்சியாளராக எனது பணிக்காலம் முடிந்துவிட்டது. ஏழு ஆண்டுகளாக என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கிறேன். இனி கிரிக்கெட் விளையாட்டை தூரமாக இருந்து ரசிப்பேன்” எனக் கூறியிருக்கிறார் ரவி சாஸ்திரி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in