ஷேன் வார்ன்: சர்ச்சை நாயகனின் தொண்டுள்ளம்!

ஷேன் வார்ன்: சர்ச்சை நாயகனின் தொண்டுள்ளம்!

கடந்த வெள்ளிக்கிழமை அகால மரணமடைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன், அவருடைய லெக் ஸ்பின் சுழற்பந்துவீச்சுக்காக உலகப் புகழ்பெற்றிருக்கும் அளவுக்கு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி விமர்சனங்களையும் எதிர்கொண்டவர். கிரிக்கெட் போட்டிகளில் புகழின் உச்சியில் விளையாடிக்கொண்டிருந்த காலத்திலேயே சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு, பெண்களுடன் தவறான சகவாசம், தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து உட்கொண்டது என பல வகையான குற்றச்சாட்டுகளுக்கும் ஆளானவர்.

2003 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கு ஆஸ்திரேலிய அணியில் ஒருவராக தென் ஆப்பிரிக்கா சென்றிருந்த வார்ன், அதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் நடந்த 50 ஓவர் போட்டித் தொடரில் விளையாடியபோது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து உட்கொண்டிருந்தார் என நிரூபிக்கப்பட்டது. இதனால் அதிகாரபூர்வ கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்கு அவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. விளைவாக, 2003 உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாக வார்ன் ஆஸ்திரேலியா திரும்பினார். வார்ன் இல்லாமலேயே அந்தக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றது. அதற்கு முந்தைய 1999 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 4 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைப் பெற்றிருந்தார் வார்ன் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் செய்த தவறுக்காக ஓராண்டு தடைக் காலத்தில் இருந்தபோது வார்ன் செய்த ஒரு மெச்சத்தக்க பணி அவருடைய மறைவுக்குப் பிறகு வெளி உலகுக்குத் தெரியவந்துள்ளது.

அதற்கு முன் ஒரு முன்கதைச் சுருக்கம்...

1993 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டிதான் இங்கிலாந்துக்கு எதிரான வார்னின் முதல் போட்டி. அந்தப் போட்டியில் வார்ன் வீசிய முதல் பந்தை இங்கிலாந்தின் அனுபவம் மிக்க மட்டையாளரான மைக் கேட்டிங் எதிர்கொண்டார். வார்னின் கையிலிருந்து வெளியேறி லெக் ஸ்டம்புக்கு வெளியே குத்திச் சென்ற பந்து கேட்டிங்கைத் தாண்டிச் சென்று ஆப் ஸ்டம்பின் பெயில்ஸை கீழே விழச்செய்தது. பந்து குத்திய இடத்திலிருந்து தன்னை நோக்கி வரும் என்று எதிபார்த்திருந்த கேட்டிங், பெயில்ஸ் விழுந்ததை நம்ப முடியாத அதிர்ச்சியுடன் பெவிலியனை நோக்கி நடைபோட வேண்டியிருந்தது. வார்ன் வீசிய இந்தப் பந்து ‘நூற்றாண்டின் பந்து’ என்று வர்ணிக்கப்படுகிறது. 1993-ம் ஆண்டில் வார்ன் டெஸ்ட் போட்டிகளில் 71 விக்கெட்களை வீழ்த்தினார். சுழற்பந்து வீச்சாளர்களில் இது ஒரு புதிய சாதனை.

இதே ஆண்டில் பிரிட்டன் தொழிலதிபர் சர் விக்டர் பிளாங் நடத்தி வந்த மகளிர் நலனுக்கான தொண்டு நிறுவனத்தின் பணிகளில் வார்ன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். நிதி திரட்டுவதற்காக பிளாங்க் நடத்திய ஒரு நலநிதி கிரிக்கெட் போட்டியில் வார்ன் பங்கேற்று விளையாடினார். அந்தப் போட்டியைக் காணவந்திருந்த ரசிகர்களும் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான்களும் வார்ன் பந்து வீசுவதை அதிக நேரம் கண்டு ரசிக்க விரும்பியதால் அவர் கூடுதலாக ஐந்து ஓவர்கள் வீசவைக்கப்பட்டார்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பிளாங்கின் தொண்டு நிறுவனம் மீண்டும் ஒரு நலநிதி கிரிக்கெட் போட்டியை ஒருங்கிணைத்தது. தடையின் காரணமாக வார்ன் அந்தப் போட்டியில் பங்கேற்க முடியாது என்று கூறிவிட்டார். பொதுநலப் பணிகளுக்கான போட்டி என்பதால் வார்னின் மீதான தடைக்கு விலக்கு அளித்து அந்தப் போட்டியில் விளையாட அனுமதிக்க வேண்டும் எனும் கோரிக்கையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது. இதனால் மனமுடைந்த போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் போட்டியில் விளையாட முடியாவிட்டாலும் போட்டி நடக்கும் நாளில் வார்ன் மைதானத்தில் இருக்க வேண்டும் என்று அவரை இங்கிலாந்துக்கு வரவழைத்தனர்.

தன் மீது இவ்வளவு அன்பு செலுத்திய போட்டி ஒருங்கிணைப்பாளர்களுக்கு வார்ன் அவர்கள் எதிர்பாராத அன்பளிப்பை அளித்தார். போட்டி தொடங்குவதற்கு முன்பு வார்ன் ஒரு யோசனையை முன்வைத்தார். தன்னால் போட்டியில் பங்கேற்க முடியாது என்றாலும் வலைப் பயிற்சியின்போது பந்துவீச முடியும். பார்வையாளர்களிடையே தன்னுடைய 5-6 ஓவர்களை ஏலம் விட்டு ஏலத்தில் வெல்கிறவர்கள் ஒவ்வொருக்கும் தலா ஒரு பந்துவீசுவதாகவும் கூறினார். போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர். போட்டியைக் காணவந்த பணக்கார கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் ஒரு ஓவர் விளையாட 200-300 பவுண்ட் வரை செலுத்தினர். இப்படியாக தன்னால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலையிலும் தன்னுடைய கிரிக்கெட் திறமையின் மூலம் ரசிகர்களையும் மகிழ்வித்து நல்ல காரியத்துக்கு நிதி திரட்டியும் கொடுத்திருக்கிறார் ஷேன் வார்ன்.

பெரும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் விளையாடத் தடை விதிக்கப்பட்டிருப்பது என்பது அவருடைய கிரிக்கெட் வாழ்வின் மிக மோசமான காலகட்டம். அத்தகைய நேரத்தில் பிரபலங்கள் பொதுவெளியில் முகம் காட்டவே தயங்குவார்கள். ஆனால் வார்ன் தன்னுடைய இமேஜ் குறித்தெல்லாம் கவலைப்படவேயில்லை. அதோடு தடையையும் மீறாமல் தன்னுடைய திறமையை சமயோஜிதத்துடன் பயன்படுத்தி பொதுநலப் பணிக்கு தன்னால் இயன்ற பங்களிப்பைச் செலுத்தினார். வார்ன் எல்லோராலும் விரும்புப்படுவது கிரிக்கெட் களத்தில் அவர் நிகழ்த்திய சாதனைகளுக்காக மட்டுமல்ல. இதுபோன்ற பின்பற்றத்தக்க குணநலன்களுக்காகவும் மெச்சத்தக்க செயல்களுக்காகவும்தான்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in