‘மைதானங்களெல்லாம் மண்டபங்களாகின’ - பாகிஸ்தான் கிரிக்கெட் கடந்துவந்த அவஸ்தையைச் சொல்லும் அஃப்ரீதி

‘மைதானங்களெல்லாம் மண்டபங்களாகின’ - பாகிஸ்தான் கிரிக்கெட் கடந்துவந்த அவஸ்தையைச் சொல்லும் அஃப்ரீதி

2009 மார்ச் 3-ம் தேதி, லாகூரில் நடந்த அந்தச் சம்பவத்தை கிரிக்கெட் ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். பாகிஸ்தானில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட வந்திருந்த இலங்கை கிரிக்கெட் அணியினர், கடாஃபி கிரிக்கெட் மைதானம் அருகே பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 6 காவலர்கள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். நல்வாய்ப்பாக இலங்கை வீரர்கள் உயிர் தப்பினர். லஷ்கர்-இ-ஜாங்க்வி எனும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. சர்வதேச அளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் பிற நாட்டு அணிகள் பாகிஸ்தானுக்கு விளையாடச் செல்வது தடைபட்டது.

இதனால், பாகிஸ்தான் அணி வெளிநாடுகளுக்குச் சென்று விளையாடினால்தான் உண்டு எனும் நிலைமை ஏற்பட்டது. இதனால், அந்நாட்டில் உள்ள கிரிக்கெட் மைதானங்கள் வெறிச்சோடின. சமீபகாலமாக, பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடிவருகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி வரை சென்று இலங்கை அணியிடம் தோல்வியைத் தழுவியது. சமீபத்தில் நடந்துமுடிந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் இறுதிப்போட்டிக்குச் சென்று, இங்கிலாந்து அணியிடம் போராடித் தோல்வியடைந்தது. எனினும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பலம் அதிகரித்திருப்பது அந்நாட்டு ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கிடையே, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடியது அந்நாட்டு ரசிகர்களை மட்டுமல்லாமல், கிரிக்கெட் ஜாம்பவான்களையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் உலகம் பழைய நிலைக்குத் திரும்பிவருவது குறித்து தனது கருத்துகளை சமா டிவி எனும் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டிருக்கிறார், அந்நாட்டு அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரீதி.

“எங்கள் கிரிக்கெட் மைதானங்கள் திருமண மண்டபங்களாக மாறிக்கொண்டிருந்தன. நாங்கள் எங்கள் மைதானங்களில் விளையாட விரும்பினோம். பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு அது ஒரு கடினமான காலகட்டம்” என்று கூறியிருக்கும் அஃப்ரீதி, பாகிஸ்தான் அரசும், கிரிக்கெட் வாரியமும் எடுத்த முயற்சிகள் காரணமாக மாற்றம் நிகழ்ந்ததைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். பிற நாட்டு கிரிக்கெட் வாரியங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைச் சம்மதிக்க வைத்திருக்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள், உலகக் கோப்பை போன்ற போட்டிகளில் வெளிநாட்டு மைதானங்களில் விளையாடுவதுதான் தற்போதைய நிலவரம். 2008-ல் மும்பையில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் அந்நாட்டுக்கு விளையாட இந்திய அணி செல்வதில்லை. அந்த நிலையும் மாறும் என்றே தெரிகிறது. 2023-ல் நடக்கவிருக்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லும் எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in