அர்ஜெண்டினா உடனான மோதலில் அதிர்ச்சி வெற்றி: தேசிய விடுமுறையை அறிவித்தார் சவுதி மன்னர்

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள். கத்தார் 2022.
மைதானத்தில் வெற்றியை கொண்டாடும் சவுதி வீரர்கள்
மைதானத்தில் வெற்றியை கொண்டாடும் சவுதி வீரர்கள்

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளின் மிரட்டல் அணியான அர்ஜெண்டினாவை அசத்தலாக வென்றுள்ளது சவுதி அரேபியா அணி. இந்த அதிர்ச்சி வெற்றியை கொண்டாடும் வகையில் தேசிய விடுமுறையை அறிவித்திருக்கிறார் சவுதி மன்னர் சல்மான்.

கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான மோதலில், நேற்று அர்ஜெண்டினா அணியை சவுதி அணி 2-1 என்ற கணக்கில் கோல் அடித்து வென்றது. சற்றும் எதிர்பார்த்திராத இந்த அதிர்ச்சி வெற்றியை சவுதி அரேபிய மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். மக்களின் மகிழ்ச்சியில் பங்கெடுக்கும் விதமாக இன்று(நவ.23) தேசிய விடுமுறையை அறிவித்திருக்கிறார் மன்னர் சல்மான்.

அர்ஜெண்டினா - சவுதி அரேபியா
அர்ஜெண்டினா - சவுதி அரேபியா

அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் என தேசத்தில் சகலத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. வாகனங்களில் தேசிய கொடியுடன் சவுதி மக்கள் வலம் வருகின்றனர். பொழுதுபோக்கு பூங்காக்கள், கண்காட்சிகள், மால்கள் ஆகியவற்றின் கட்டணத்தை ரத்து செய்தும், தளர்த்தியும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணியின் ஆட்டத்தை காண திரளான பார்வையாளர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்திராத வகையில் சிறப்பான விருந்தை சவுதி அணி பரிமாறியது. மோதல் ஆட்டத்தின் முதல் பாதி அர்ஜெண்டினா பக்கமே இருந்தது. சவுதி அணியின் கோல் போஸ்ட் அருகிலேயே போக்குகாட்டியபடி அர்ஜெண்டினா வீரர்கள், எதிரணியினரை சதா மிரட்டியபடி இருந்தனர்.

அர்ஜெண்டினா அடித்து விளையாட, அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாதபடி சவுதி தடுப்பாட்டத்திலேயே கவனமாக இருந்தது. அந்த வகையில் 14 முறை கோல் போஸ்ட் அருகே முன்னேறிய அர்ஜெண்டினாவால் ஒரேயொரு கோல் மட்டுமே போட முடிந்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இந்த முதல் கோலை மெஸ்ஸி அடித்ததில் ரசிகர்களுக்கு ஆச்சரியம் இல்லை. ஆனால் அடுத்த கோல்களுக்கு வாய்ப்பின்றி சவுதி தடுப்பாட்டத்தில் தீவிரம் காட்டியதில் ரசிகர்கள் வாய்பிளந்தனர்.

அதிர்ச்சியில் ஆழ்ந்த மெஸ்ஸி
அதிர்ச்சியில் ஆழ்ந்த மெஸ்ஸி

இரண்டாம் பாதியில் அந்த அதிசயம் நடந்தது. தனது முதல் கோல் மூலம் அர்ஜெண்டினாவை சமன் செய்த சவுதி, ’பெனால்டி கிக்’ வாயிலாக இரண்டாவது கோல் அடித்தது. இது அர்ஜெண்டினா மட்டுமன்றி உலக கால்பந்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளித்தது. சவுதி உள்ளிட்ட வளைகுடா மக்கள் இந்த அதிர்ச்சி வெற்றியின் அனுபவத்திலிருந்து இன்னும் மீளவில்லை. அர்ஜெண்டினாவுக்கும் இது விநோத அனுபவம். அர்ஜெண்டினாவுக்கு உலகக்கோப்பையை வென்று தருவதில் லயோனல் மெஸ்ஸிக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்ற எதிர்பார்ப்புகளின் மத்தியில் காத்திருந்த ரசிகர்களுக்கு சவுதி புதிய வரலாறு புகட்டியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in