41,000 கோடி முதலீடு... ஐபிஎல் தொடரில் கால் பதிக்கும் சவுதி அரேபியா!

ஐபிஎல் தொடர்
ஐபிஎல் தொடர்
Updated on
1 min read

உலக அளவில் நடத்தப்பட்டு வரும் லீக் கிரிக்கெட் போட்டிகளில் ஐபிஎல் முதலிடத்தில் உள்ளது. ஆண்டு தோறும் இதன் பார்வையாளர்கள் அதிகரிப்பதோடு, வருமானமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, புட்பால் லீக் தொடர்களுக்கு இணையாக ஐபிஎல் உலக புகழ்பெற்றுள்ளது. இதன் காரணமாக பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் முதலீடு செய்ய முன் வந்துள்ளன. அதேபோல், மான்செஸ்டர் யுனைடெட் போன்ற கால்பந்து கிளப்களும், ஐபிஎல் தொடரில் அணியை வாங்க விரும்பின.

இந்நிலையில், வரும் 2024ம் ஆண்டுக்கான 17வது ஐபிஎல் சீசனுக்காக ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடக்க இருக்கிறது. இதையடுத்து வரும் மார்ச் முதல் மே வரையில் ஐபிஎல் 17வது சீசன் நடக்க இருக்கிறது.

இந்த நிலையில் தான் ஐபிஎல் தொடரின் பல பில்லியன் டாலர் பங்குகளை வாங்க சவுதி அரேபியா விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ஆலோசகர்கள் ஐபிஎல் தொடரை 30 பில்லியன் டாலர்கள் (2 லட்சத்து 50 ஆயிரம் கோடி) மதிப்புள்ள ஹோல்டிங் நிறுவனமாக மாற்றுவது குறித்து இந்திய அரசு அதிகாரிகளிடம் பேசியதாக கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா வந்த சவுதி இளவரசர் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

ஐபிஎல் அணிகள்
ஐபிஎல் அணிகள்

அப்போது, 5 பில்லியன் டாலர் அதாவது 41 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்யவும் சவுதி அரசு முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஐபிஎல் தொடரை மற்ற நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்வதற்கு உதவவும் சவுதி அரசு தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு பிசிசிஐ எந்த பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், 2024ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு இதுகுறித்து முடிவு எடுக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் ஏற்கெனவே அரம்கோ மற்றும் சவுதி சுற்றுலா ஆணையம் உட்பட ஏராளமான ஸ்பான்சர்களைக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு ஒளிபரப்பு உரிமம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் ஐபிஎல் மூலம் பிசிசிஐ 51 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in