’இந்தியா நடத்தும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் பங்கேற்காவிட்டால், அதனை யார் பார்ப்பார்கள்..?’

இந்தியாவை சீண்டும் பாக். கிரிக்கெட் வாரியம்
’இந்தியா நடத்தும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் பங்கேற்காவிட்டால், அதனை யார் பார்ப்பார்கள்..?’

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான இரு நாட்டு கிரிக்கெட் அணிகளின் பரஸ்பர பயணத்தை முன்வைத்து புதிய உரசல் எழுந்துள்ளது. ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போட்டிகளை முன்வைத்து இந்த மோதல் வெடித்துள்ளது.

பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பங்கேற்காது என்ற முடிவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலரான ஜெய் ஷா கடந்த மாதம் அறிவித்திருந்தார். ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் பொறுப்பையும் வகிக்கும் ஜெய் ஷா, ‘இந்திய அணி பாகிஸ்தான் செல்வதை அரசுதான் தீர்மானிக்கும். இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அதில் தலையிடமுடியாது. ஆனால் பாகிஸ்தானுக்கு வெளியே ஆசிய கோப்பைக்கான போட்டிகள் நடந்தால் மட்டுமே இந்தியா பங்கேற்கும்’ என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான ரமீஸ் ராஜா தாமதமாக தற்போது வாய் திறந்துள்ளார். ’ஆசிய கோப்பையில் பங்கேற்க இந்தியா பாகிஸ்தானுக்கு வராவிட்டால், அடுத்தாண்டு இந்தியா நடத்தும் உலகக் கோப்பை கிரிக்கெட்டை பாகிஸ்தான் புறக்கணிக்கும். பாகிஸ்தான் இடம்பெறாத உலகக் கோப்பையை யார் பார்ப்பார்கள்?’ என்று அவர் சீறி உள்ளார்.

கடைசியாக 2008ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் பங்கேற்பதற்காக இந்தியா பாகிஸ்தான் சென்றது. அதே போல, 2016ஆம் ஆண்டின் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் இந்தியா வந்திருந்தது. அதன் பிறகு 2 நாடுகளின் அணிகளும் இந்தியா - பாகிஸ்தானுக்கு வெளியே மட்டுமே மோதி வருகின்றன. அப்படி இந்த அக்டோபர் இறுதியில் மெல்போர்னில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்காக இரு அணிகளும் மைதானத்தில் சந்தித்துள்ளன.

பாதுகாப்பு காரணங்கள் மற்றும் அரசின் முடிவுகளுக்கு உட்பட்டு இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்வதை தவிர்த்து வருகிறது. பதிலடியாக பாகிஸ்தானும் தனது இந்திய வருகையை தவிர்க்க ஆரம்பித்தது. உலக கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய இந்தியா - பாக் மோதும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறுவது பொருளாதார ரீதியில் பாக் கிரிக்கெட் வாரியத்துக்கு உதவும். இந்தியா தனது பாக். பயணத்தை தவிர்ப்பதால், பாக் கிரிக்கெட் வாரியம் ஏமாற்றம் அடைந்துள்ளது.

இந்த ஏமாற்றத்தை ரமீஸ் ராஜா வேறு வகையில் வெளிப்படுத்தி உள்ளார். ’கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை மற்றும் டி20 ஆசிய கோப்பை என 2 மோதல்களிலும் பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடித்துள்ளது’ என்று சீண்டியுள்ளார். பாகிஸ்தானுக்கான பதிலை கடந்த மாதமே இந்தியா தெளிவுபடுத்தி உள்ளது. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், ‘யார் பங்கேற்றாலும் பங்கேற்காது போனாலும் இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டவாறு நடக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in