எனது நோக்கம் பணம் சம்பாதிப்பது அல்ல!

மருத்துவரான விளையாட்டு வீராங்கனை
நாடியா நடிம்
நாடியா நடிம்

உலக கால்பந்தாட்ட வீராங்கனைகளில் மிக முக்கியமானவராகவும் எவர்கிரீன் நட்சத்திர வீராங்கனை யாகவும் திகழும் டென்மார்க்கின் நாடியா நடிம், இப்போது அறுவை சிகிச்சை நிபுணராகவும் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்!

டென்மார்க்கின் தேசிய கால்பந்து அணியின் நட்சத்திர வீராங்கனையாக ஜொலிக்கும் நாடியா, அமெரிக்காவின் கரோலினா கால்பந்தாட்ட அணிக்காகவும் விளையாடி வருகிறார். 12 ஆண்டுகளாக டென்மார்க் அணிக்காக 93 போட்டிகளில் பங்கேற்று, சிறந்த கோல்களை அடித்து, நாட்டுக்குப் பெருமை தேடித் தந்தவர். கடந்த ஆண்டு பாரிஸ் செயின்ட் ஜெர்மைனுடன் விளையாடி, பிரெஞ்சு லீக் பட்டத்தை வென்ற பிறகு, நாடியாவின் புகழ் இன்னும் பல மடங்கு அதிகரித்தது.

யார் இந்த நாடியா?

டென்மார்க்கின் அடையாளமாகக் கொண்டாடப்பட்டாலும் நாடியாவின் தாய்நாடு டென்மார்க் அல்ல. அவர் டென்மார்க்கில் அடைக்கலம் புகுந்த ஓர் அகதி. நாடியாவின் தாய்நாடு ஆப்கானிஸ்தான். இவரின் பெற்றோருக்குப் பிறந்த ஐந்து பெண் குழந்தைகளில் ஒருவர் நாடியா. பெண் கல்வியின் அவசியம் நாடியாவின் அம்மாவுக்கு நன்றாகப் புரிந்திருந்தது. அதனால் தன் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், மற்ற குழந்தைகளுக்கும் பாடம் சொல்லிக் கொடுப்பார்.

ஒருநாள் தாலிபான்களால் நாடியாவின் அப்பா தூக்கிலிடப்பட்டார். அதைத் தாங்கமுடியாத சக்தி இல்லாமல் நிலைகுலைந்து போனது குடும்பம். இனிமேலும் ஆப்கானிஸ்தானில் இருந்தால் நல்லதல்ல என்று நினைத்த நாடியாவின் அம்மா, லண்டனில் இருக்கும் உறவினர்களிடம் செல்ல முடிவெடுத்தார். இதற்காக போலி பாஸ்போர்ட்களை வாங்கினார். பாகிஸ்தான், இத்தாலி வழியாக இங்கிலாந்து செல்வதுதான் அவரது திட்டம். அதன்படி இத்தாலியிலிருந்து ஒரு டிரக்கில் ஆறு பெண்களும் பயணம் செய்துகொண்டிருந்தனர். திடீரென்று ஓரிடத்தில் டிரக் நின்றது. அந்த இடத்திலேயே ஆறு பேரையும் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டது.

லண்டனைப் பார்க்கும் ஆவலுடன் இறங்கிய நாடியாவுக்கு பெருத்த ஏமாற்றம். ஒரு காட்டுக்குள் டிரக் அவர்களை இறக்கிவிட்டுச் சென்றது அப்புறம் தான் புரிந்தது. அந்த வழியே வந்தவர்களிடம், “இது எந்த நாடு?” என்று கேட்டபோது, “டென்மார்க்” என்றார்கள். இப்படித்தான் ஐரோப்பாவிலிருக்கும் சின்னஞ்சிறிய நாடான டென்மார்க்கில் அகதிகளாக அடைக்கலம் புகுந்தது நாடியாவின் குடும்பம்.

கடினமான வாழ்க்கை என்றாலும் தனது ஐந்து பெண் மக்களையும் படிக்க வைத்தார் நாடியாவின் அம்மா. அப்பாவின் மறைவு ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து வெளிவர நாடியாவுக்குக் கால்பந்து விளையாட்டு உதவியது. உள்ளூர் கால்பந்தாட்ட அணியில் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார். நாடியாவின் திறமை டென்மார்க் முழுவதும் தெரிய ஆரம்பித்தது. 2009-ம் ஆண்டு டென்மார்க் தேசிய கால்பந்தாட்ட அணியில் சேர்க்கப்பட்டார் நாடியா. கோல்கள் அடிக்க அடிக்க அவரது புகழ் உயரம் கூடிக்கொண்டே சென்றது. உலக அளவில் முக்கியமான கால்பந்தாட்ட வீராங்கனையாக உருவானார்.

புகழும் பணமும் சேர்ந்த போதும் நாடியா படிப்பை நிறுத்தவில்லை. ஒரு குறிப்பிட்ட வயது வரைதான் விளையாட முடியும். எஞ்சிய வாழ்க்கையை ஏற்கெனவே பெற்ற புகழையும் பணத்தையும் வைத்துக்கொண்டு ஓட்டிவிட நாடியா விரும்பவில்லை. விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் சமூகத்துக்கு உபயோகமான ஒரு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார் நாடியா. அதற்காகவே மருத்துவம் பயின்றார். அப்படித்தான் தனது 33-வது வயதில் அறுவை சிகிச்சை நிபுணராகியிருக்கிறார் நாடியா.

”கால்பந்தாட்ட மைதானத்தில் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். ஆபரேஷன் தியேட்டரில் மணிக்கணக்கில் அசையாமல் நின்றுகொண்டே இருக்க வேண்டும். இரு துறைகளிலும் கவனம் முக்கியம். விபத்துகளில் சிக்கி நம்பிக்கையிழந்து வருபவர்களுக்கு, நம்பிக்கையளித்து, அறுவை சிகிச்சை செய்து, அவர்களை மீண்டும் இயல்பான வாழ்க்கைக்குக் கொண்டு வருவது மருத்துவத்தால்தான் முடியும். அதனால் இந்த வேலை எனக்கு விருப்பமானதாக இருக்கிறது. என்னுடைய 33 ஆண்டுகால அனுபவத்தில் 200 ஆண்டுகால அனுபவங்களை - நல்லதாகவோ மோசமானதாகவோ - பெற்றிருக்கிறேன். பலர் செய்த உதவியால்தான் நான் இன்றைக்கு இந்த நிலையை எட்டியிருக்கிறேன். அதனால் நானும் பலரைக் கைதூக்கிவிடுவதை என் கடமையாக நினைக்கிறேன். பெண் என்பதற்காகவோ இஸ்லாமியர் என்பதற்காகவோ வாய்ப்புகள் மறுக்கப்படும் பெண்கள், தைரியமாக என்னை உதாரணமாகக் காட்டலாம்” என்கிறார் நாடியா.

2018-ம் ஆண்டு தன்னுடைய சுயசரிதையை எழுதி வெளியிட்டார் நாடியா. விளையாட்டு வீரர்களின் புத்தகங்களில் மிக முக்கியமான புத்தகமாக இது கருதப்படுகிறது. சென்ற ஆண்டு இந்தப் புத்தகம் பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்டிருக்கிறது. ’மை ஸ்டோரி’ என்ற பெயரில் ஆங்கிலத்திலும் வந்திருக்கிறது.

சிறுமிகள் நலன், பெண் கல்வி, பாலினச் சமத்துவம் போன்றவற்றில் அதிக அக்கறையோடு செயல்பட்டு வரும் நாடியா, யுனெஸ்கோவின் சிறுமிகள் மற்றும் பெண் கல்வி அம்பாசிடராக 2019-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டார்.

அதிக ஊதியம் பெறக்கூடிய வீராங்கனையாக இருந்தாலும் நாடியா தனக்குப் பணம் சம்பாதிக்கக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக்கொள்ளவில்லை. தன்னுடைய முதல் நோக்கம் பணம் சம்பாதிப்பது அல்ல, ஒரு மருத்துவராகச் சமூகப் பணியாற்றுவதுதான் என்கிறார்.

கோல்களை அடித்துத் தள்ளும் இந்த வீராங்கனையிடம் உங்கள் வாழ்க்கைக்கான ’கோல்’ என்ன என்று கேட்டால், “என் வாழ்க்கையில் கோல் எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. எந்த வேலையைச் செய்தாலும் சிறப்பாகச் செய்துவிட வேண்டும், அவ்வளவுதான்” என்கிறார் நாடியா நடிம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in