பந்துவீச்சில் பட்டையைக் கிளப்பிய பாகிஸ்தான்; 205 ரன்கள் இலக்கு... பேட்டிங்கில் சாதிக்குமா?

பந்துவீச்சில் பட்டையைக் கிளப்பிய பாகிஸ்தான்; 205 ரன்கள் இலக்கு... பேட்டிங்கில் சாதிக்குமா?

இன்றைய லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் அணி 204 ரன்களில் ஆல் அவுட்டானது.

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் 31-வது லீக் ஆட்டத்தில் பாபர் அசாம் தலைமையலான பாகிஸ்தான் மற்றும் ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, பேட்டிங் செய்ய வந்த வங்கதேச அணியில் தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸ் - தன்சித் ஹசன் ஜோடி களமிறங்கினர். இதில் தன்சித் ஹசன் டக்-அவுட் ஆகி நடையைக் கட்டினார். அடுத்து வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டி 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

பின்னர் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் உடன் ஜோடி சேர்ந்த முஷ்பிகுர் ரஹீம் ஒரு பவுண்டரியை விரட்டி 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். களத்தில் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து வந்த லிட்டன் தாஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 6 பவுண்டரிகளை விளாசிய அவர் 46 ரன்னுக்கு அவுட் ஆனார். அவருடன் மறுமுனையில் சிறப்பான ஜோடி அமைத்து அரைசதம் அடித்த மஹ்முதுல்லா 56 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த வீரரான தவ்ஹித் ஹிரிடோய் ஒரு சிக்ஸரை மட்டும் பறக்கவிட்டு 7 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்ததாக கேப்டன் ஷாகிப் அல் ஹசன் - மெஹிதி ஹசன் மிராஸ் ஜோடி சேர்ந்தனர். வங்கதேச அணி 38 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.

சிறிது நேரத்தில் ஷகிப் 43 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாக தஸ்கின் அகமது களமிறங்கினார். மறுமுனையில் ஆடி வந்த மெஹிதி 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து முஸ்தாபிஷூர் களமிறங்கிய நிலையில், தஸ்கின் 6 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாக இஸ்லாம் களமிறங்கி 1 ரன் எடுத்த நிலையில், முஸ்தாபிஷூர் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து வங்கதேசத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. வங்கதேசம் அணி 45.1 ஓவர்களில் 10 விக்கெட்களையும் இழந்து 204 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிதி மற்றும் முகமது வாசிம் ஜூனியர் தலா 3 விக்கெட்களையும், ஹரிஸ் ரவுஃப் 2 விக்கெட்களையும், இப்திகார் அகமது மற்றும் உசாமா மிர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து பேட்டிங் செய்துவரும் பாகிஸ்தான் அணி 5.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in