ஒருநாள் கிரிக்கெட்டை 40 ஓவராக குறைக்கவேண்டும்: ரவி சாஸ்திரி அதிரடி கருத்து!

ஒருநாள் கிரிக்கெட்டை 40 ஓவராக குறைக்கவேண்டும்: ரவி சாஸ்திரி அதிரடி கருத்து!

ஒருநாள் கிரிக்கெட்போட்டிகளை 50 ஓவரில் இருந்து 40 ஆக குறைக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் பிரபலமாக உள்ளது. எனவே 50 ஓவர் கிரிக்கெட் மிக நீளமானதாக உள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த சூழலில் 31 வயதேயான இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவித்தார். இது கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில் இது குறித்து பேசிய ரவி சாஸ்திரி, “ஒருநாள் போட்டிகளின் கால அளவைக் குறைப்பதில் எந்தத் தீங்கும் இல்லை. ஒரு நாள் கிரிக்கெட் தொடங்கும் போது 60 ஓவர்கள் கொண்டதாக இருந்தது. 1983ல் நாங்கள் உலகக் கோப்பையை வென்றபோது அது 60 ஓவர்கள் போட்டிதான். அதன்பிறகு 60 ஓவர்கள் சற்று நீளமானது என்று மக்கள் நினைத்தனர். 20 முதல் 40 வரையிலான ஓவர்கள் ஜீரணிக்க கடினமாக இருப்பதை மக்கள் கண்டறிந்தனர். அதனால் அதை 60ல் இருந்து 50 ஆக குறைத்தார்கள். அந்த முடிவெடுத்து பல வருடங்கள் கடந்துவிட்டன, இப்போது ஏன் அவ்வாறு 50லிருந்து 40ஆக குறைக்கக்கூடாது. ஏனென்றால் நாம் முன்னோக்கிச் சிந்திக்க வேண்டும், 50 ஓவர்கள் என்பது மிக நீளமாக உள்ளது" என்று கூறினார்.

முன்னதாக, ஸ்டோக்ஸ் ஓய்வுக்குப் பிறகு ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது பேசிய ஷாகித் அப்ரிடி, “ஒரு நாள் கிரிக்கெட் இப்போது மிகவும் சலிப்பாகிவிட்டது. ஒரு நாள் கிரிக்கெட்டை 50 ஓவர்களில் இருந்து 40 ஓவர்களாக குறைக்க நான் பரிந்துரைக்கிறேன், அது பொழுதுபோக்குக்காக இருக்கும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in