ஒலிம்பிக் செல்லமுடியாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளி மணிகண்டன்

ஒலிம்பிக் செல்லமுடியாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளி மணிகண்டன்
உசேன்போல்ட் மாதிரியே மணிகண்டன்

மக்கள் மனது வைத்தால்தான் பிரேசிலில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள முடியும் என்ற நிலையில் இருக்கிறார் தடகள வீரர் மணிகண்டன். இவர் செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசிலில் மே மாதம் நடக்கவிருக்கும் 24-வது கோடைக்கால காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள இந்தியாவின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (18). தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஆறு பேரில் இவரும் ஒருவர். மற்றவர்களெல்லாம் பிரேசில் செல்ல விமான டிக்கெட் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு பயணத்துக்குத் தயாராக இருக்கும் நிலையில், பணம் திறட்ட தனக்கேதும் வழி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் மணிகண்டன்.


உசேன் போல்ட்டை தனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்டிருக்கும் மணிகண்டன், அனைத்துப் போட்டிகளிலும் திறம்பட விளையாடுபவர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வெற்றி சான்றுகள் வைத்திருக்கிறார். தேசிய அளவிலான போட்டிகளில் வென்று 13 பதக்கங்கள் வென்றவர். 100 மீட்டர் ஓட்டம் , 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல், தொடர் ஓட்டம் என்று அனைத்திலும் சிறந்து விளங்கும் இவர், தற்போது திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பி.எஸ்சி., படித்து வருகிறார். கல்லூரி, பல்கலைக்கழக அளவிலான அனைத்து போட்டிகளிலும் தடகளத்தில் முதல் இடம் இவருக்குத் தான்.

மணிகண்டனை வாழ்த்தும் அமைச்சர் மெய்யநாதன்
மணிகண்டனை வாழ்த்தும் அமைச்சர் மெய்யநாதன்

கடந்த ஆண்டு போலந்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட மணிகண்டன் நீளம் தாண்டுதலில் 7-வது இடத்தைப் பிடித்தார். அதனால் இந்த ஆண்டு பிரேசில் ஒலிம்பிக் போட்டிக்கு 200 மீட்டர் மற்றும் நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இந்தப் போட்டிகளுக்காக போலந்த் சென்றுவர சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் செலவாகும் என கணக்குப் போட்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கான எந்த முகாந்திரமும் இவர்களிடம் இல்லை. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தமிழ் நாட்டின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பேரையும் அழைத்துக்கொண்டுபோய் முதல்வரை சந்திக்க வைத்திருக்கிறார். அப்போது ஆறு பேரையும் வாழ்த்திய முதல்வர், அரசின் சார்பில் தலா 30 ஆயிரம் ரூபாய் நிதி அளித்திருக்கிறார்.

தற்போது அந்தப் பணம் மட்டுமே இவர்களிடம் இருக்கிறது. மேற்கொண்டு தேவைப்படும் பணத்துக்கு என்ன செய்வது என்ற வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது மணிகண்டன் குடும்பம்.

மணிகண்டனின் தாய் செல்வி, தந்தை காமராஜ் இருவரும் விவசாயக் கூலிகள். அதனால், இந்தளவுக்கு பணத்தை எப்படி புறட்டுவது என்பது தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மணிகண்டனின் லட்சியப் பயணத்துக்கு உதவ நினைப்பவர்கள் 7339512197 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories

No stories found.