ஷாக் கொடுத்தது நெதர்லாந்து... வங்கதேசத்தை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அபாரம்!

நெதர்லாந்து அணி
நெதர்லாந்து அணி

வங்கதேசத்திற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 28வது லீக் போட்டியில் வங்கதேசம் - நெதர்லாந்து அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. தொடக்கம் முதலே திணறிய நெதர்லாந்து அணி வீரர்கள் மிக சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினாலும், கடைசி 10 ஓவர்களில் சுதாரித்து ஆடினார்கள். இதனால் அந்த அணி 50 ஓவர் முடிவில் 229 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக ஸ்காட் எட்வார்ட்ஸ் 68 ரன்னும், வெஸ்லே பரேஸி 41 ரன்னும் எடுத்தனர். வங்கதேசம் சார்பில் ஷோரிபுஃல் இஸ்லாம், தஸ்கின் அஹ்மத், முஸ்தபிஷூர் ரஹ்மான், மெஹதி ஹாசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 230 ரன் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது.

ஆனால் நெதர்லாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச வீரர்கள் ஆரம்பம் முதலே திணறினர். லிட்டன் தாஸ் 3 ரன்கள், தன்சித் ஹசன் 15 ரன்கள், மிராஸ் 35 ரன்கள், சாண்டோ 9 ரன்கள், கேப்டன் சகிப் அலி ஹசன் 5 ரன்கள், ரஹிம் 1, மஹ்மதுல்லா 20 ரன்கள், மெஹிதி ஹசன் 17 ரன்கள், தஸ்கின் அஹமது 11 ரன்கள், முஸ்தஃபிசூர் 20 ரன்கள் எடுத்தனர். இதனால் 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வங்கதேச அணி 142 ரன்களில் சுருண்டது. நெதர்லாந்து சார்பாக வான் மீகெரென் 4 விக்கெட்டுகளையும், டீ லீ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலமாக முதன் முறையாக ஒரு உலகக்கோப்பையில் இரு போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளது. மேலும் புள்ளிப்பட்டியலிலும் இங்கிலாந்து, பங்களாதேஷ் அணிகளை பின்னுக்குத் தள்ளி 8ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in