
இந்திய ரசிகர்கள் சிலர் தனக்கு அருவருக்கத்தக்க குறுஞ்செய்திகளை அனுப்பி வருவதாக ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமன் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அணியை வீழ்த்தி 6வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் அந்நாட்டு அணிக்கு உற்சாக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இருப்பினும் இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாத இந்திய அணி, இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது இந்திய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து சமூக வலைதளங்களில் ஆஸ்திரேலியா அணியை கடுமையாக விமர்சித்து இந்திய ரசிகர்கள் சிலர் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீதும், இந்திய வீரர்கள் மீதும் அவதூறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதை அடுத்து, தனக்கு சில இந்திய ரசிகர்கள் அருவருக்கத்தக்க குறுஞ்செய்திகளை அனுப்பி வருவதாக ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான மேக்ஸ்வெல்லின் மனைவியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான வினி ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“நான் பிறந்து வளர்ந்த, என் கணவர் விளையாடும் ஆஸ்திரேலியாவை ஆதரித்துக்கொண்டு, அதேசமயம் இந்தியராகவும் இருக்கலாம் என்பதை மெசேஜ் அனுப்புபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என வினிராமன் அந்த பதிவில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாக வினிராமன் இந்தியர் என்பதை குறிப்பிட்டு, மேக்ஸ்வெல் இந்தியாவின் மருமகன் என்று கொண்டாடி வந்த சில ரசிகர்கள் சிலர், தற்போது அவரது மனைவியை வருந்தச் செய்யும் வகையில் செய்தி அனுப்பியதாக வெளியாகி இருக்கும் இந்த குற்றச்சாட்டு, விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.