மூன்று தங்கப் பதக்கம் வென்று அசத்தல்: காது கேளாதோருக்கான ஒலிம்பிக்கில் சாதித்த மதுரை மாணவி

தங்கம் வென்ற மாணவி ஜெர்லின் அணிகா
தங்கம் வென்ற மாணவி ஜெர்லின் அணிகா
ஜெர்லின் அணிகா
ஜெர்லின் அணிகா

பிரேசிலில் நடைபெற்று வரும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் இறகுப்பந்து பிரிவில் மூன்று தங்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார் மதுரை மாநகராட்சி பள்ளி மாணவி ஜெர்லின்.

மதுரை மாவட்டம், அவனியாபுரம் பகுதியை சேர்ந்த ஜெய ரட்சகன் என்பவரது மகள் ஜெர்லின் அணிகா (17). மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் இவர், இறகுப்பந்து போட்டிகள் பலவற்றில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்நிலையில், பிரேசிலில் நடைபெற்று வரும் 24-வது செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் இறகுப்பந்து பிரிவில் பங்கேற்றார். அதில், ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரியாவின் கே. நியூடோல்ட்டை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். கலப்பு இரட்டையர் பிரிவில் ஜெர்லின் அணிகா-அபினவ் சர்மா ஜோடி மலேசியாவின் பூன்-டியோ ஜோடியை வீழ்த்தி பதக்கம் வென்றுள்ளது. மேலும் குழு இறகுப்பந்து போட்டியிலும் பங்கேற்று தங்கம் வென்று மொத்தமாக மூன்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

இதுகுறித்து அவரது தந்தை ஜெய ரட்சகன் காமதேனுவிற்கு அளித்த பேட்டியில், "2019-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார். அதேபோன்று, இந்திய அளவில் பல்வேறு தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார். ஏற்கெனவே உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள ஜெர்லின் தற்போது 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளதால் முதல் இடத்திற்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கம் வென்றுள்ள நிலையில் இந்திய பிரதமரையும், தமிழக முதல்வரையும் பார்ப்பதற்காக நேரம் கேட்டுள்ளோம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in