கோலி - சூர்யகுமார் அதிரடி: ஹாங்காங்கை சுருட்டியது இந்தியா!

கோலி - சூர்யகுமார் அதிரடி: ஹாங்காங்கை சுருட்டியது இந்தியா!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி ஹாங்காங் அணியை வீழ்த்தியது.

ஆசியக்கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வென்று இந்தியா ‘ஏ’ பிரிவில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் துபாயில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஹாங்காங் அணியுடன் இந்தியா மோதியது. இந்தப் போட்டியின் டாஸ் வென்ற ஹாங்காங் கேப்டன் நிஜாகத் கான் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தொடக்கம் முதலே வேகம் காட்டி 21 ரன்னில் ஆட்டம் இழந்தார். மற்றொரு பக்கம் ராகுல் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் பின்னர் விராட் கோலி - சூர்யகுமார் இணை ஹாங்காங் பந்துவீச்சை துவம்சம் செய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு கோலி தனது அரை சதத்தை பதிவு செய்து ரசிகர்களை குதூகலிக்க வைத்தார். சூர்யகுமார் வெறும் 22 பந்துகளில் அரை சதம் அடித்து அதிரடி காட்டினார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் 68 ரன்களையும், கோலி 59 ரன்களையும் எடுத்து களத்தில் இருந்தனர்.

அடுத்ததாக விளையாடிய ஹாங்காங் அணியும் நல்ல ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். மிக அதிகபட்சமான இலக்கு என்றாலும் தங்களால் முடிந்தவரை ஹாங்காங் பேட்ஸ்மேன்கள் முட்டி மோதி பார்த்தனர். அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் ஹயாத் 41 ரன்களையும், கின்சித் ஷா 30 ரன்களையும், ஜீஷன் அலி 26 ரன்களையும் எடுத்தனர். இருப்பினும் அவர்களால் 5 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 152 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஏற்கெனவே பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, இரண்டாவது போட்டியில் ஹாங்காங் அணியையும் வீழ்த்தி ‘ஏ’ பிரிவில் முதலிடத்தில் இருப்பதால், ஆசியக் கோப்பையில் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in