வின்னிங் சிக்ஸர் அடித்ததற்காக வருத்தப்பட்ட கே.எல்.ராகுல்... என்ன காரணம் தெரியுமா?

கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல்

நேற்று நடந்த இந்தியா ஆஸ்திரேலியா போட்டியில் 3 ரன்களில் கே.எல்.ராகுல் சதத்தை தவறவிட்டார். இதில் கடைசியில் வின்னிங் சிக்ஸருக்காக கே.எல்.ராகுல் வருத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக பொறுப்பேற்று இருந்த கேஎல்.ராகுல் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். அதற்குப் பின்னால் அவரது காயத்திற்கு அறுவை சிகிச்சையும் நடந்தது. இந்த நேரத்தில் ஒருபுறம் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவிப்பதிலும், அவர் காயம் குணமடைவதிலும் பெரிய ரேஸ் நடந்து கொண்டு இருந்தது.

இதற்கு நடுவே இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு அவரை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்தது. அந்த நேரத்தில் அவர் ஆசியக் கோப்பை அணியிலும் இடம் பெற்று, ஆனால் காயம் முழுவதும் குணமடையாத காரணத்தினால் செல்லாமல் இருந்தது சர்ச்சையாக மாறியது.

இந்த நிலையில் ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி நேரத்தில் இந்திய அணிக்குள் வந்து, அபாரமாக ஒரு சதம் அடித்து அனைவரது பார்வையையும் தன் பக்கம் திருப்பினார். மேலும் இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அவர் ஆட்டம் சிறப்பாக இருந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக நேற்று உலகக்கோப்பையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான துவக்க ஆட்டத்தில் 200 ரன்களை துரத்திய பொழுது, முதல் இரண்டு ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது.

இந்த நேரத்தில் விராட் கோலி உடன் இணைந்து 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததோடு, இறுதிவரை களத்தில் நின்று 115 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு வெற்றியையும் தேடி தந்து அசத்தினார். அவர் சதம் அடிப்பதற்கு இருந்த ஒரு சிறிய வாய்ப்பு கடைசியில் சிக்ஸர் அடித்த காரணத்தினால் நழுவியது. இந்திய அணியின் ரன்கள் 195 ஆக இருந்தபோது அவர் ஒரு பவுண்டரி அடித்து, அதன்பின்னர் சிக்ஸர் அடித்திருந்தால், சதத்தை எட்டி இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சிக்ஸர் அடித்தும் கே.எல்.ராகுல் அதற்கு வருத்தப்பட வேண்டியதாக இருந்தது.

கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல்

போட்டி முடிவுக்குப் பின் நகைச்சுவையாக இதுகுறித்து கூறிய கே.எல்.ராகுல், ” நான் அந்த பந்தை நன்றாக அடித்தேன். ஆனால் பவுண்டரி செல்லும் என்று நினைத்தேன். ஆனால் சிக்ஸராக மாறியது. பவுண்டரி சென்று இருந்தால், அடுத்து சிக்ஸர் அடித்து சதத்தை எட்டி இருக்கலாம். ஆனால் அடுத்த முறை இது நடக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in